இந்தியாவின் சுதந்திர பெண்களின் பங்கு .கட்டுரை
Answers
Answer:
மகாத்மா காந்தி மேற்கொண்ட ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பெண்களின் மகத்தான பங்களிப்பு குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்திய தேச விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் மகத்தான தலைவராக காந்தி அடிகள் நினைவுகூரப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட போராட்டங்கள் பல. அந்தப் போராட்டங்களிலும், இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போராட்டங்களிலும் ஆடவர் மட்டுமின்றி மகளிர், குழந்தைகள் என பலரும் பங்களிப்பு செய்துள்ளனர். அவற்றை நினைவுகூரும் வகையில் தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் "சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு' தொடர்பான சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி அருங்காட்சியக வளாக கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சியை மத்திய கலாசார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுஜாதா பிரசாத் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் அபர்ணா பாசு தயாரித்த "காந்தியின் மக்கள் இயக்கத்தில் பெண்கள்' எனும் தலைப்பிலான சிறப்பு அறிக்கையையும் சுஜாதா பிரசாத் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் சாதனா ரௌத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரிதான புகைப்படங்கள்: இப்புகைப்படக் கண்காட்சியில் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த அரிதான பல புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்கு எதிராக காந்தி அடிகள் மேற்கொண்ட போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை, வீராசாமி, வி.எஸ். நாயுடு மற்றும் மகாபீர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற புகைப்படம், சிறைக்குச் சென்ற சிவப்பிரசாத், மின்னட்ஜீ, சோமர் ஆகியோரது புகைப்படம், வி.எஸ். பிள்ளை, மூன்சாமி முத்லே உள்ளிட்டோரின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பெண்கள் குழுவாகப் பங்கேற்ற புகைப்படங்கள், ராட்டை நூற்பு வேள்வியில் பெண்களின் பங்களிப்பு, புணேயில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் பாரத மாதா பேனரை ஏந்திச் செல்லும் பெண் காதி தொழிலாளர்கள், மகாராஷ்டிர மாநிலம் கன்சோலி பகுதியில் உப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பழங்குடிப் பெண்கள், நவகாளியில் காந்தியிடம் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள், பெண்களின் ஒற்றுமையைப் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் உள்பட 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சுதந்திரப் போராட்ட பெண் தலைவர்கள் கமலா தேவி, கஸ்தூரிபாய் காந்தி, சரோஜினி நாயுடு, சோஃபியா கான், டாக்டர் சுஷிலா நய்யார், லீலாவதி கன்னையாலால், துர்காபாய் தேஷ்முக், ஜானகி தேவி, பசந்த் தேவி, ராமாபாய் கோகலே, துர்காபாய் ஜோஷி உள்ளிட்ட பலரது புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் போலீஸாரை எதிர்கொண்டு போராடும் பெண்களின் புகைப்படங்கள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளன.
இது குறித்து தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ.அண்ணாமலை கூறுகையில், "மகாத்மா காந்தியின் மக்கள் இயக்கத்தில் பெண்கள் பங்களிப்பு அளப்பரியது. அதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக இந்த சிறப்புக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி தொடர்ந்து நடைபெறும்.
கல்லூரி மாணவ, மாணவிகளிடம் உந்துதலை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியைப் பார்வையியிட்டுச் செல்லும் வகையில் பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுத உள்ளோம். இங்கு கண்காட்சியைப் பார்வையிடும் மாணவர்கள் கலந்துரையாடவும் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும்' என்றார்.
PLEASE MARK AS BRAINLIEST