கேளிக்கையும் வேடிக்கையும் -
Answers
வேடிக்கை:
அடுத்தவர்களுடன் கேளிக்ககையாகப் பேசுவதையும் விளையாடுவதையும் இஸ்லாம் வரையறைகளுடன் அனுமதித்துள்ளது. நமது கேளிக்கை அன்பையும் நற்பையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். மாறாக, கோபத்தையும் குரோதத்தையும் உண்டாக்குவதாக அமையக் கூடாது.
நமது விளையாட்டு அடுத்தவர்களைப் பதட்ட மடையச் செய்வதாகவோ, பயமுறுத்துவதாகவோ அமையக் கூடாது. இன்று மக்களை மகிழ்வூட்டுவ தற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட சில கெட்டப்புகளையும் செட்டப்புகளையும் செய்து நிகழ்ச்சி களைத் தயாரிக்கின்றனர். அதில் வரும் காட்சிகள் சில போது இதய நோயாளிகளை இறக்க வைத்துவிடும். பல்கலைக்கழக பகிடிவதையும் இந்த வகையைச் சார்ந்ததாகும். எத்தனையோ மாணவ மாணவிகளின் கல்விக்கு பகிடிவதை தடையாக அமைந்துள்ளதுடன் உயிர் பறிக்கும் ஆட்கொல்லி யாகவும் அமைந்துள்ளது.
கஷ்டப்பட்டு பிள்ளையைப் படிக்க வைத்து ஆயிரம் கணவுகளுடன் பிள்ளைகளை பல்கலைக் கழகம் அனுப்பும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவது எப்படி பகிடிவதையாக இருக்கும்?
“நபித்தோழர்கள் நபி(ச) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தனர். அப்போது ஒருவர் தூங்கினார். ஒருவர் அவரது ஆயுதத்தை எடுத்து ஒழித்து வைத்துவிட்டார். தூங்கியவர் விழித்தவுடன் தனது பொருட்களைக் காணாமல் பதட்டம் அடைந்தார். இதைக் கவனித்த நபி(ச) அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பதட்டமடையச் செய்வது ஆகுமானதல்ல” என்று கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத் 5004, அஹ்மத் 23064)
எனவே, விளையாட்டிலும் விதிமுறைகள் இருக்க வேண்டும். ஒருவரின் பெறுமதியான பொருளை ஒழித்து வைத்தால் சிலபேர் இன்றைய சூழ்நிலையில் பதட்டத்தில் பாதிக்கப்படலாம். வியைhட்டு விபரீதத்தில் முடியலாம். வரம்பு இல்லாத விளையாட்டுக்களால் பல உயிரிழப்புக்கள் கூட இன்று ஏற்படுவதைப் பார்க்கின்றோம்.
பட்டப்யெர் சூட்டுவது:
ஒருவரை அவமதிக்கும் விதத்தில் பட்டப்பெயர் சூட்டுவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
“நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத் தினர், மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.” (49:11)
ஆனால், ஒருவருக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் பட்டம் கூறி அழைக்கலாம். நபி(ச) அவர்கள் அலி(வ) அவர்களுக்கு ‘அபூ துராப்’ மண்ணின் தந்தையே எனச் செல்லமாக பட்டம் சூட்டினார்கள். அது அவருக்கு விருப்பமான பெயராக இருந்தது.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(வ) அறிவித்தார். “அலீ(வ) அவர்களுக்கு ‘அபூ துராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயரே மிகவும் பிரியமானதாக இருந்தது. மேலும், அப்பெயர் சொல்லி தாம் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு ‘அபூ துராப்’ என்று நபி(ச) அவர்களே பெயர் சூட்டினார்கள். (அப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டதற்கான காரணம்:) ஒரு நாள் அலீ(வ) அவர்கள் (தம் துணைவியாரான) ஃபாத்திமா(வ) அவர்களின் மீது (ஏதோ காரணத்திற்காகக்) கோபப்பட்டு வெளியேறிச் சென்று பள்ளிவாசலில் ஒரு சுவரில் சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். அவர்களைத் (தேடியவாறு) பின்தொடர்ந்து நபி(வ) அவர்கள் வந்தார்கள். அப்போது ஒருவர், ‘அவர் இதோ பள்ளிவாசலில் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறார்’ என்று கூறினார். எனவே, அலீ(வ) அவர்களிடம் நபி(ச) அவர்கள் வந்தார்கள். (படுத்திருந்ததால்) அலீ(வ) அவர்களின் முதுகில் நிறைய மண் படிந்திருந்தது. நபி(வ) அவர்கள் அலீயின் முதுகிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே ‘அபுதுராபே! (மண்ணின் தந்தையே! எழுந்து) அமருங்கள்’ என்று கூறினார்கள்.”
“தன்னைப் பார்த்து ‘யாதல் உதுனைன்’ இரண்டு காதுகளை உடையவரே” என நபியவர்கள் (விளையாட்டாக) அழைத்ததாக அனஸ்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சிறுவர்களுடன்….
நபியவர்கள் சிறுவர்களுடன் அதிகம் விளையாடியுள்ளார்கள். அவர்களது விளையாட்டுக் களை அங்கீகரித்துள்ளார்கள்.
“அனஸ்(வ) அவர்களுக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு சிட்டுச் குருவி வளர்த்து வந்தார். அது இறந்துவிட்டது. இதனால் அவர் சோகமாக இருந்தார். அப்போது நபி(ச) அவர்கள் அவரிடம், ‘யா அபா உமைர் மா பஅலன் னுகைர்’ அபூ உமரே! உங்கள் சிட்டுக் குருவிக்கு என்ன நடந்தது? என இரக்கமாகப் பேசினார்கள்” என அனஸ்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தான் ஐந்து வயதாக இருக்கும் போது நபி(ச) அவர்கள் வாளியில் இருந்து தனது வாய்க்குத் தண்ணீரை எடுத்து அந்த இடத்தில் இருந்த தனது முகத்திற்கு அதை உமிழ்ந்து விளையாடியதாக முஹம்மத் இப்னு ரபீஃ(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மனைவியருடன்…
நபியவர்கள் தமது மனைவியருடன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களின் விளையாட்டு ஆர்வத்திற்கு இடம் கொடுத்துள்ளார்கள். அன்னை ஆயிஷா(Ë) அவர்களுடன் நபியவர்கள் ஓட்டப் பந்தயம் நடத்தியுள்ளார்கள். ஒரு முறை ஆயிஷா(Ë) அவர்கள் ஜெயித்துவிட்டார்கள். மற்றொரு தினம் ஓடிய போது, நபியவர்கள் ஜெயித்துவிட்டார்கள். ஜெயித்துவிட்டதுடன் அன்று என்னைத் தோற்கடித்ததற்கு இது பதிலடி என்று கூறி சிரித்தார்கள்.
இவ்வாறே மஸ்ஜிதுக்கு முன்னால் அபீஸீனிய வீரர்கள் வீர விiளாட்டுக்கள் விளையாடிய போது அதை ஆயிஷா(Ë) அவர்கள் பார்ப்பதற்கு அனுமதித்ததுடன் அதற்கு ஒத்துழைப்பும் செய்தார்கள். தனது வீட்டில் ஆயிஷா(Ë) அவர்கள் பொம்மைகள் வைத்து விளையாட அனுமதித்தார்கள். இவ்வாறான நிறையவே சம்பவங்களை நபியவர்கள் வாழ்வில் காணலாம்.
மனித வாழ்வில் வேடிக்கை விளையாட்டுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். வேதனைகளும், சோதனைகளும் நிறைந்த நெருக்கடி நிறைந்த இந்த வாழ்க்கையால் மனிதன் மனநல பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றால் வேடிக்கை விளையாட்டுக்கும் இடம் ஒதுக்குவது அவசியமாகும். இறுக்கமான முகத்துடனும் உள்ளத்துடனும் வாழ வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.