உனக்கு பிடித்த கவிஞர் கட்டுரை
Answers
Answer:
பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று அனைவராலும் போற்றப்படுபவர் மகாகவி பாரதியாரே ஆவார். அவருடைய பாடல்கள் மக்களிடையே நாட்டு விடுதலையையும், தேசிய ஒருமைப்பாட்டையும், சாதி ஒழிப்பையும், பெண்விடுதலையையும் ஏற்படுத்தின. பாட்டுத்திறத்தால் இவ்வையகத்தை ஆட்டிப் படைத்த பாரதியே நான் விரும்பும் கவிஞராவார்.
இளமைப்பருவம்
பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 – ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னச்சாமி - இலக்குமி அம்மாள் ஆவர். இவர் தம் 11 – ஆம் வயதிலேயே கவிதை புனைந்து பாரதி என்னும் பட்டத்தைப் பெற்றார். பாரதியார் தம் 15 – ஆம் வயதில் செல்லம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.
பாரதியாரின் பணிகள்
இவர் 1904 – ஆம் ஆண்டு எட்டையபுர மன்னரிடம் பணியாற்றினார். பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் நாளிதழில் உதவியாசிரியராகவும் சக்கரவர்த்தினி மாத இதழில் பொறுப்பாசிரியராகவும் பணி செய்தார். 1906 – இல் ‘இந்தியா’ நாளிதழிலும் ‘பாலபாரதி’ என்ற ஆங்கில ஏட்டிலும் பொறுப்பாசிரியராக இருந்தார்.
விடுதலை வேட்கை
“என்று தணியும் எங்கள் சுதந்தர தாகம்” – என்ற பாடலும்
“ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில்
அன்னியர் வந்துபுகல்என்ன நீதி” – என்ற பாடலும்
நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வையும் ஆங்கில ஆதிக்கத்தின் எதிர்ப்பையும் ஏற்படுத்தின.
நாட்டுப்பற்று
“பாருக்குள்ளே நல்லநாடு பாரத நாடு”
“பாரதநாடு பழம்பெரும்நாடு – நீரதன்
புதல்வர் அந்நினை வகற்றாதீர்”
என்னும் பாடல்கள் நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்றை உண்டாக்கின.
சமுதாயத் தொண்டு
“சாதிகள் இல்லையடி பாப்பா”
என்று சாதி ஒழிப்பை உணர்த்தினார்.
“மாதர்தம்மை இழிவுசெய்யும் மடைமையைக் கொளுத்துவோம்”
என்று பெண் விடுதலையைப் பாடினார்.
“தனியொருவனுக் குணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்”.
என்று சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தேசிய ஒருமைப்பாடு
“முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்” - என்னும் பாடலும்
“எல்லாரும் ஓர்குலம்; எல்லாரும் ஓர்நிறை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” - என்னும் பாடலும்
தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றன.
முன்னறி புலவர் பாரதி
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட் டோமென்று” – என்னும் பாடலும்
“காசி நகர்புலவர் பேசும் உனரதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” – என்னும் பாடலும்
எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளை தம்காலத்திலே பாடியதற்கு சான்றாக உள்ளன. இதனால் பாரதியார் முன்னறிப்புலவராகத் திகழ்கிறார்.
முடிவுரை
உலகமகா கவியாக விளங்கிய பாரதி 11.09.1921 அன்று மண்ணுலகைவிட்டு விண்ணுலகை அடைந்தார். பாரதி காட்டிய வழியைப் பின்பற்றி வீடும் நாடும் நலம் பெறச் செய்வோம்.