'பாரதி புத்தகம் 'எவ்வகை தொகை?
Answers
3.1 பொது இலக்கணம்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்.
3.1.1 தொகைநிலைத் தொடர்
சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர் இலக்கண நூலார்.
‘தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை என்பனவாகும். இனி, ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.
3.1.1.1 வேற்றுமைத் தொகை
‘நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு என்று முன்னரே படித்துள்ளீர்கள். ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.
‘தலை வணங்கினான்’ என்பது ‘தலையால் வணங்கினான்’ என விரியுமாதலின் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை.
‘மங்கை மகள்’ என்பது ‘மங்கைக்கு மகள்’ என விரியும். ஆதலின், இது நான்காம் வேற்றுமைத் தொகை.
‘நாடு நீங்கினான்’ என்பது ‘நாட்டின் நீங்கினான்’ என விரியும். ஆதலின் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
‘வேலன் சட்டை’ என்பது ‘வேலனது சட்டை’ என விரியும். ஆதலின், இது, ஆறாம் வேற்றுமைத் தொகை.
‘மரக்கிளி’ என்பது ‘மரத்தின் கண் கிளி’ என விரியும் ஆதலின் இது, ஏழாம் வேற்றுமைத் தொகை.