சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
Answers
Answer:
முன்னுரை:
காற்றினால் ஏற்படும் ஓசையை ஒளியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழிகள் நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்பு இதுகாறும் தோன்றவில்லை என்பதே உண்மை, அவ்வாறு தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி தான் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். இத்தமிழ்மொழி சான்றோர்கள் பலரின் தியாகத்தாலும் உழைப்பாலும் அது இன்று உயர்தனிச் செம்மொழியாக நிலைபெற்று நிற்கிறது. மொழி வளர்த்த சான்றோர்கள் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழின் தொன்மை:
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தென்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தமிழின் நன்மையைக் என்றுமுள தென்தமிழ்" என்பார் கம்பர், 'உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
ஜி.யு. போப்பின் தமிழ் பணி
தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு தமிழாய் மலர்ந்து, மணம் பரப்பி என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றவர். திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டு வெளியிட்டு திருக்குறளின் பெருமையை உலகறியச்செய்தார். ஆங்கில மொழியை அன்னை மொழியாகக் கொண்ட போப் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என தனது கல்லறையில் எழுதுமாறு இறுதிமுறியில் எழுதி தன்னைத் தமிழராகவே ஆக்கிக் கொண்டார்
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி:
இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர் தமிழகம் வந்து தமிழைக் கற்றார். தமிழ்மொழிப் பற்றினால் 'தைரிய நாதர்' என முதலில் சூட்டிக்கொண்ட தனது பெயரைத் தனித்தமிழாக்கி 'வீரமாமுனிவர்' எனச் சூட்டிக் கொண்டார். இவர் தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்,
ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணி
யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஆறுமுகனாரது மொழித்திறமையையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்ட திருவாதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்னும் பட்டத்தை அளித்தனர், இவரை 'வசனநடைகைவந்த வல்லாளர்' எனப் பரிதிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார். ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து அனைவரும் தமிழ் சுவைக்கச் செய்தார்.
நான்காம் தமிழ்ச் சங்கம்:
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தனர் தமிழ்ப் புலவர்கள்.அச்சங்கங்கள் கடற்கோளால் கொள்ளப்பட்ட பின்னர் பரிதிமாற் கலைஞர், உவே. சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் பாசுகர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் மதுரையில் நான்காம் தமிழ்ச் அமைத்துத் தமிழை வளர்த்தனர் தமிழர்,
உலகத் தமிழ் மாநாடு:
உலகிலேயே மொழிக்காக, முதன்முதலில் மாநாடு நடத்திய நாடு மலேசியா, அதுவும் தமிழ் மொழிக்காக நடைபெற்றது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்றும் தமிழ் ஆட்சி மொழியாகத் திகழ்கிறது. காரணம் அவ்விடங்களில் குடிபெயர்ந்த தமிழர்களின் தமிழ்ப்பற்றும் தமிழை வளர்க்கும் நோக்கமுமேயாகும்,
முடிவுரை:
குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழினம் உலகமெலாம் பரவித் தன்புகழை நிலைநாட்டி வருவதற்குக் காரணம் தமிழ்ச் சான்றோர்களின் தியாகமே என்றால் மிகையாகாது.
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு"
Answer:
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை:
தமிழ்ப்பூஞ்சோலையில் பல்லாயிரம் செடி கொடிகளில் பலகோடி வண்ண மலர்கள் மலர்கின்றன. நறுமணமும் நறுந்தேனும் தென்றலில் கரைகின்றன. தேனுண்ட வண்டு பாடி மகிழ்கின்றன; மயங்கித் தெளிகின்றன. மகரந்தச் சேர்க்கையால் புதுப்புது மலர்கள் தோன்றுகின்றன. அயராத உழைப்பால் தமிழ்ச்சோலை வளர்த்த வண்டுகளைக் காண்போம், வாரீர்.
தமிழின் எல்லை:
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” எனப் பனம்பாரனார் தமிழின் எல்லை சுட்டுகிறார். “தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று சிறுபாணாற்றுப்படையும் “தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே” என்று புறநானூறும் தமிழன்னையின் தாய்வீடு பற்றிக் குறிப்பிடுகின்றது.
எழில்சேர் கன்னி:
“இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்” என்கிறது, பிங்கலந்தை நிகண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாக அணிந்தவள், தமிழன்னை; பாலும் தேனும் போன்ற பாட்டும் தொகையும் அருந்தியவள்; நீதி நூல்களைத் தனது நெற்றியில் அணிந்தவள்; தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களைத் துவளாமல் அணிந்தவள். புதுப்புது இலக்கிய வடிவங்களை அணிந்து கணினித் தமிழாய், கன்னித்தமிழாய் வளர்ந்து வருகிறாள்.
பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்தவள்
தெய்வத்தையோ அல்லது மக்களுள் சிறந்தாரையோ குழந்தையாகப் பாவித்து பத்து பருவங்கள் அமைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். ஒட்டக்கூத்தரின் இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முந்தியது. குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் சிறப்பு வாய்ந்தவை.
நூறு பாடல்களைக் கொண்ட நூலுக்குச் ‘சதகம்’ என்று பெயர். மாணிக்கவாசகரின் திருச்சதகமே முதல் சதகம் ஆகும். படிக்காசுப் புலவரின் தொண்டைமண்டல சதகம் புகழ் வாய்ந்தது.
பரணி பாடி, கலம்பகம் கண்டவள்
“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி“. சயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியே முதல் பரணியாகும். தத்துவராயரின் மோகவதைப் பரணி, வைத்தியநாதரின் பாசவதைப் பரணி, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை.
புயவகுப்பு முதலான பதினெட்டு உறுப்புகள் கொண்டு, பலவகைப் பாக்களும் கலந்து பாடுவது கலம்பகம் ஆகும். மூன்றாம் நந்திவர்மனின் நந்திக்கலம்பகமே முதல் கலம்பக நூலாகும். இரட்டையர்கள், கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள். இதனைக் “கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்னும் தொடர் விளக்கும்.
உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்தவள்:
அரசர்கள் உலா வரும்போது ஏழு பருவ மங்கையரும் கண்டு, காதல் கொண்டு, மயங்குவதாகப் பாடுவது உலாவாகும். சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய ‘திருக்கயிலாய ஞான உலா‘ காலத்தால் முற்பட்டது. ஒட்டக்கூத்தரின் ‘மூவருலா’ குறிப்பிடத்தக்கது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதி வகை முகிழ்த்து, மலர்ந்து, மணம் பரப்பியது. காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் அந்தாதி. முதலாழ்வார் மூவரின் நூற்றந்தாதிகள், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி வகையே மிகுதி.
அகத்துறைக் கூற்றுகளை வரிசைப்படி கோத்துப் பாடுவது கோவை.
பாண்டிக்கோவை, மாணிக்கவாசகரின் திருக்கோவை, பொய்யாமொழிப் புலவரின் தஞ்சைவாணன் கோவை ஆகியவை புகழ்பெற்றவை.
முடிவுரை:
கம்பரும் கபிலரும், ஔவையும் வள்ளுவரும், ஆழ்வார்களும் நாயன்மார்களும், வீரமாமுனிவரும் உ.வே.சாமிநாதரும்,
பாரதியும் தாசனும் இன்னும் பலரும் அருந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று படித்து மகிழ்ந்தனர், புலவர் பெருமக்கள். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை‘ என்ற தாசனின் கூற்று மெய் ஆகிறது.
சான்றோர் தமிழைச் சுவாசிக்க இங்கே தொடவும்
– மலர் மகேந்திரன்.