அண்ணா எழுதிய கடிதத்தின் கருத்துகளை சுருக்கி எழுதுக
நெடுவினாக்கள்
அண்ணாவின் கடிதம்
Answers
விடை:
அண்ணா எழுதிய கடிதத்தின் கருத்துக்கள்:
தம்பி!
சென்ற ஆண்டு பொங்கற் திருநாளன்று நீ குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மகிழ்ந்திருந்த காட்சியினை கண்டு களித்திருந்தேன். அதிலே பெறும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்றிருந்த என்னை இன்றோ ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி விட்டாய். பெரு வெற்றி, நற்காலம், பொற்காலம் என்று மகிழ்கின்றாய். நானும் என்னாலான அளவுக்கு உன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நடந்துகொள்ள முற்படுவேன். எனினும் இந்தப் பொங்கல் புதுநாளன்று உன் புன்னகை தவழ்ந்திடும் முகத்தினைக் கண்டு, தங்கு தடையற்ற நிலையில் இருந்து வந்த நான், இன்று கட்டுண்டு இருக்கிறேன்.
ஒன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையில் நாம் இருந்தாலும் இந்த பொங்கற் புதுநாளில் நமக்கு மகிழ்வும், நாட்டிற்கு புது பொலிவும் ஏற்படுகிறது. நலிந்தோருக்கும்கூட புதுதெம்பும் வருகிறது. இந்நாளில் மட்டுமே உழைப்பின் பெருமையையும், தமிழரின் நேர்த்தியான வாழ்வையும் உரையாடி மகிழ்ந்திட வாய்ப்பு ஏற்படுகிறது. நமக்கெல்லாம் எழுச்சி தரத்தக்க வகையில் பொருள் யாவும் தந்தாள் நிலமடந்தை. ஆயினும் பாலூட்டும் தாய் முடியாது – விடு – பிறகு – அடிப்பேன் என்று விளையாட்டுக் காட்டுவதுபோல் நிலமடந்தையும் வளம் அளிக்குமுன் விளையாட்டுக் காட்டுவாள். அவள் அதன் மூலம் உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என்று கட்டளை இடுகிறாள்.
நம் காலத்து நற்புலவர்கள் பொங்கல் திருநாளை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்கள். இத்தகைய நாளன்று என்னால் இயன்ற கருத்தினை உனக்கு காஞ்சி இதழ் மூலம் அளித்துள்ளேன். இதனைப் பெற்று நீ மகிழ்ச்சி அடைவாய். பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம் -- என்று அறிஞர் அண்ணா, தன் தம்பிகளுக்கு கடிதம் எழுதினார்.