English, asked by nithyanandham1980, 1 month ago

எழுத்துகளின் இடப் பிறப்பை விவரி? ​

Answers

Answered by ajithamerlin1
2

Explanation:

எழுத்துகளின் பிறப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! தமிழ் எழுத்துகளின் வகை, தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நீங்கள், எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள். உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும் உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் வழங்குவர்.

உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் முதல் எழுத்துகள் எனப்படும் என்பதை முன்னரே அறிந்தீர்கள். மெய்யெழுத்துகளை ஒலிக்கும்பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி ஆகியன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவேயாகும்.

எழுத்துகளின் பிறப்பினை, நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் கூறியதைப் போலவே, மொழியியல் அறிஞர் ஒலிநூலுள் அடக்குவர். ஒலி எழுவதற்குக் காரணமான காற்று, நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்குத் துணைசெய்யும் உறுப்புகளை ஒலிப்பு முனைகள் எனவும் கூறுவர்.

1.3.1 முதலெழுத்துகளின் பிறப்பிடம்

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ மற்றும் ய, ர, ல, வ, ழ, ள).

மெல்லின எழுத்துகள் ஆறும் (ங,ஞ,ண,ந,ம,ன) மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. வல்லின எழுத்துக்கள் ஆறும் (க,ச,ட,த,ப,ற) மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

1.3.1.1 உயிரெழுத்துகளின் பிறப்பிடம்

அ, ஆ -ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

அவற்றுள்

முயற்சியுள் அஆ அங்காப்புடைய (நன்னூல்-76)

(அங்காப்பு - வாயைத் திறத்தல்)

இ, ஈ, எ, ஏ, ஐ -ஆகிய ஐந்து எழுத்துகளும் வாயைத் திறப்பதோடு மேல்வாய்ப் பல்லை, நா விளிம்பு தொடுவதால் பிறக்கின்றன.

இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன்னூல்-77)

உ, ஊ, ஒ, ஓ, ஔ -ஆகிய ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே. (நன்னூல்-78)

1.3.1.2 உயிரெழுத்துகளின் உச்சரிப்பு முறை

உயிர் எழுத்துகளை உச்சரிப்பு முறையில் அடிப்படையில் இதழ் குவிந்த உயிர் இதழ் குவியா உயிர் என இரண்டாகப் பகுக்கலாம்.

இதழ் குவிந்த உயிர் - உ, ஊ, ஒ, ஓ, ஔ

இதழ் குவியா உயிர் - அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ.

1.3.1.3 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்

க், ங் - இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

ச், ஞ் - இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.

ட், ண் - இவை, நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.

த், ந் - மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.

ப், ம் - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, இவ்வெழுத்துகள் பிறக்கும்.

ய் - இது, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.

ர், ழ் - இவை, மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

ல் - இது, மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.

ள் - இது, மேல்வாயை, நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.

வ் - இது, மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.

ற், ன் - இவை, மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

1.3.1.4 மெய்யெழுத்துகளின் உச்சரிப்பு முறை

மெய் எழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு அல்லது பிறப்பு அடிப்படையில் பின்வருமாறு ஏழு வகைப்படுத்தலாம்.

1. ப், ம் ஆகியவற்றை இரண்டு இதழ்களும் பொருந்த உச்சரிக்கிறோம். ஆகவே, இவற்றை ‘ஈரிதழ் ஒலிகள்’ என்பர்.

2. வ் எழுத்தைக் கீழ் உதட்டில் மேற்பல் பொருந்த உச்சரிக்கிறோம். அதனால், இதனை ‘உதட்டுப்பல் ஒலி’ என்பர்.

3. த், ந் ஆகியவற்றை நுனி நா, மேற்பல்லின் உட்புறத்தைப் பொருத்த உச்சரிக்கிறோம். அதனால் இவற்றைப் ‘பல் ஒலிகள்’ என்பர்.

4. ல், ர், ற், ன் ஆகியவற்றை நுனி நா, நுனி அன்னத்தைப் பொருந்த உச்சரிக்கிறோம். அதனால், இவற்றை ‘நுனி அண்ண’ ஒலிகள் என்பர்.

5. ட், ண், ழ், ள் ஆகியவற்றை நுனி நா மேல்நோக்கி வளைந்து, நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால், இவற்றை ‘வளை நா ஒலிகள்’ என்பர்.

6. ச், ஞ், ய் ஆகியவற்றை நடு நா, நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால் இவற்றை ‘அண்ண ஒலிகள்’ என்பர்.

7. க், ஞ் ஆகியவற்றைக் கடை நா கடை அண்ணத்தைத் தொட உச்சரிக்கிறோம். அதனால் இவற்றைக் ‘கடை அண்ண ஒலிகள்’ என்பர்.

Answered by thilagaranimahe
4

எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவை இடப்பிறப்பு

Similar questions