எழுத்து பிழைகளை தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய யவை,
Answers
ஏராளமாய்ப் படியுங்கள். கதைகள் படிப்பது, படிக்கும் உற்சாகத்தை விடாமல் இருக்க உதவும். நல்ல கட்டுரைகள்படிப்பது அறிவையும் மொழிவளத்தையும், மொழியைக் கையாளும் விதத்தையும், இலக்கண அமைப்பையும் மறைமுகமாகக் கற்கப் பெரிதும் உதவும்.
கல்கி, சாண்டில்யன், நா, பார்த்த சாரதி, அகிலன், ஜெயகாந்தன், தி ஜானகிராமன், பாலகுமாரன், ராஜம் கிருஷ்ணன், மு வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சுஜாதா என்று பலரையும் படியுங்கள். ஒவ்வொருக்கும் ஒரு பாணி; ஒரு எழுத்து வீச்சு உண்டு.
ழ,ல, ள வித்தியாசங்களைப் படித்தும் தமிழறிந்தவர்களைக் கேட்டும் நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள்.
பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பது அவசியம். படித்தும் கேட்டும் அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய உதாரணம்: அவர்கள், அன்னார், அவர், அவங்க,அவுங்க, அவுக, அவுரு, அந்தாளு, அவங்கிய, அந்தப் பெரிசு — இவற்றில் எது நல்ல எழுத்துத் தமிழ், எது பேச்சுத் தமிழ், இதில் வட்டார வழக்குகள் என்னென்ன என்று நீங்கள் அறிய வேண்டும்.
ஒருமை-பன்மை அடிப்படை இலக்கணம் அறியவேண்டும் - உதாரணம்: “கடையில் பலப்பல புடவை இரகங்கள் இருந்தது" — தவறு. “இருந்தன” என்பது சரி.
செய்வினை செயப்பாட்டுவினை, எழுவாய் பயநிலை ஒத்துப்போதல் இவை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். உதாரணம்:
“கடையில் விதவிதமான புடவை இரகங்கள் இருந்தன” - சரி
“கடையில் விதம்விதமான புடவை இரகங்கள் காட்சிக்கு வைத்திருந்தன“ — தவறு. “காட்சிக்கு வைக்கப்பட்டிடுந்தன" — சரி (செயல் பாட்டு வினை)
“கடையில் விதம் விதமான புடவை இரகங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள் “ — சரி!
இவையெல்லாம் பழகப் பழக்கச் சரியாய் வரும். (தமிழ் செய்தி வாசிப்புகளில்கூட இதுபோன்ற உபயோகங்களில் தவறுகள் செய்கிறார்கள்).
கதைகளில் வரும் உரையாடல்கள் கொச்சைப்பேச்சில் இருக்கலாம்; ஆனால், கட்டுரைகளில் அவற்றை கவனத்துடன் கையாளவேண்டும்.
கொச்சைத்தமிழையும் சுத்தத்தமிழையும் கலந்தடிக்கக்கூடாது.