நான் விரும்பும் அறிஞர் அண்ணா என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக 7 ஆம் வகுப்பு
Answers
Answer:
குறிப்புச்சட்டம்
முன்னுரை
தோற்றமும் கல்வியும்
பொதுநலப் பணிகள்
கலைப்பணியும் இலக்கியப் பணியும்
முதலமைச்சர் அண்ணா
அண்ணாவின் பண்புகள்
முடிவுரை
முன்னுரை
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"
என்னும் வள்ளுவர் மொழிக்குச் சான்றாய் வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அறிஞர்' என்னும் சொற்பொருளுக்கு உரியவராய், 'அண்ணா' என்னும் உறவுக்குப் பெருமை தந்தவராய் வாழ்ந்தவர்; அரசியலில் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்.
தோற்றமும் கல்வியும்:
இவர், பழைமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரில் நடராசன் பங்காரு தம்பதியருக்கு 1909, செப்டம்பர் 15-ஆம் நாள் நன்மகனாய்ப் பிறந்தார். காஞ்சிப் பச்சையப்பன் உயர்பள்ளியில் கல்வி கற்றபின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பொதுநலப் பணிகள்:
இவர், தந்தை பெரியாருடன் இணைந்து பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பினார். ஏற்றத்தாழ்வு அழிப்பு. சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழிப் பாதுகாப்பு ஆகிய பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். 1939, 1946-இல் நடை பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைப்பட்டார். 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் கோட்பாடுகளை வலியுறுத்தினார்; தம் எழுத்தாற்றலாலும் சொல்லாற்றலாலும் இயக்கத்தை வளர்த்தார்.
கலைப்பணியும் இலக்கியப் பணியும்:
பேரறிஞர் அண்ணா சிறந்த எழுத்தாளர், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ. முதலிய புதினங்களை எழுதியுள்ளார். ஓர் இரவு, வேலைக்காரி, சந்திரோதயம் முதலான நாடகங்களை எழுதிக் கலைத்துறையிலும் தம் முத்திரையைப் பதித்தார். இவரது படைப்புகள் காஞ்சி, குடியரசு, திராவிட நாடு, தென்னகம், நம்நாடு, பகுத்தறிவு, முரசொலி, விடுதலை போன்ற இதழ்களை அணிசெய்தன. கதைகள், கட்டுரைகள், தம்பிக்குக் கடிதம், நாடகங்கள், திரைப்படங்கள், சொற்பொழிவுகள் முதலியன வாயிலாகத் தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இவரது அடுக்குமொழிநடை பொதிகைத் தென்றல் போன்று இன்ப மூட்டியது.
முதலமைச்சர் அண்ணா:
1967-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவரது கட்சி வெற்றிபெற்றது. அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார்; சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு' என்று பெயரிட்டு மகிழ்ந்தார்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்; சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுமெனச் சட்டமியற்றினார்; மதச் சார்பின்மையை நிலைநாட்ட அரசு அலுவலகங்களில் கடவுள் படத்தை மாட்டத் தடை விதித்தார்; சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தித் தமிழறிஞர்களுக்குச் சிலை வைத்தார்; பள்ளிகளில் இருமொழித் திட்டம் தொடர அனுமதித்தார்.
அண்ணாவின் பண்புகள்:
அண்ணா காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் பேசாதவர்; மாற்றாரை மதிக்கும் பண்பாளர்; ஆற்றல் மிக்கவர்; ஆணவம் இல்லாதவர்; தன்னம்பிக்கையுடையவர்; நடுவுநிலை தவறாதவர்; எதிரிகளுங்கூட அன்பும் மரியாதையும் செலுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பண்பாளர்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முயன்றவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியன கைக்கொண்டவர்; மனித நேயங் கொண்ட மாண்பாளர்.
முடிவுரை:
1968-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகமும் இவரை வரவழைத்துப் பாராட்டியது. பேரறிஞர் அண்ணா 1969-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 'எதையும் தாங்கும் இதயம்' கொண்ட இவர் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்.
“பண்பாட்டின் திருவுருவம் என உயர்ந்தாய் பார்புகழும் அறிஞர் அண்ணா” - மு.வரதராசன்