kudi valnthal kodi nanmai katturai in tamil letters
Answers
Answer:
பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும். இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, ஓடையின் சலசலவென ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. இதைக் கேட்கும்போது நம்மில் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இதனை கண்டிப்பாக கற்பனைச் செய்திருப்பர்.
பாருங்கள்... இதில் நான் கூறிய அனைத்தும் தனித்தனியான ஒன்று அல்ல. பூஞ்சோலை, மாந்தோப்பு, தென்னந்தோப்பு இப்படி எதுவாகட்டும். அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவையனைத்தும் தனித்தனியாக இருந்திருந்தால்... கற்பனையான பதில் கூட இல்லை இதற்கு.
வேற்றுமையில் வேறுவேறாய் பிரிந்து கிடந்த நம்மை நோக்கி, ஒற்றுமையின் ஒப்பில்லா பலனை உணர்ந்தே மீசைக் கவிஞன் பாரதியும், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே” என்றார். ஒற்றுமை இல்லையெனில் கிடைத்திருக்குமா சுதந்திரம்? நம் முன்னோர்களும் கூடியிருத்தலின் நலம் கருதியே “தனிமரம் தோப்பாகாது, ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” போன்ற பழமொழிகளைத் தந்துவிட்டு சென்றனர்.
நாமும் சிறுவயதில் நான்கு காளையும் ஒரு சிங்கமும் போன்ற கதைகளின் வழியாக ஒற்றுமையின் மேன்மையை ஓர்ந்தே வாழ்ந்தோம். ஆனால் இடையில், சுயநலமிக்க சில இடைத்தரகர்களால் நம்மில் ஒற்றுமை நீங்கி, வேற்றுமையுடனும், வெறுப்புடனும் மேலான வாழ்க்கையை, ஏதோ மேம்போக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வள்ளுவரும் ஒற்றுமையின் பலத்தை அறிந்தே, தன் குறட்பாவில், ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தை இயற்றியுள்ளார். அதில் ஒரு குறள்,
“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.” (213)
இதன் பொருள், ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது என்பதாகும்.
முற்காலத்தில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்த நம் கலாச்சாரம், மேற்கத்திய கானல் கலாச்சாரத்தில் மயங்கி, இன்று தனித்தனி தீவாய் சென்றனர். தனித்திருத்தால் ஒருவித சுகம்தான். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆயினும் சேர்ந்திருத்தல் தரும் சுகமோ, தனியொருவனுக்கு பாதுகாப்பு தருவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் பெருமையைத் தருகிறது.
சுழலும் பூமியும் தானே சுற்றிக் கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அது சூரியனிடம் ஒருவித ஈர்ப்புவிசையோடு இருப்பதால்தானே, உலகமும் விலகாமல் ஒரு பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. உயிர்களையும் விடாது பற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வுலகில் ஒவ்வொன்றும் கூடும்போதும், கூடியிருக்கும்போதும்தான் நன்மை தருகிறது.
கூடியிருக்கும் கற்கள்தான் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிற்கிறது.
கூடியிருக்கும் தாள்கள்தான் புத்துணர்வுதரும் புத்தகமாகிறது.
கூடியிருக்கும் செடிகொடிமரங்கள்தான் மனத்திற்கு இனிய சோலைவனமாகிறது.
கூடியிருக்கும் தென்னங்குச்சிகள்தான் கூட்டிப் பெருக்கும் துடைப்பமாகிறது.
கூடியிருக்கும் பூக்கள்தான் தோளேறும் பூமாலையாகிறது.
கூடியிருக்கும் நல்ல பாக்கள்தான் நாவேறும் நல்ல பாட்டாகிறது.
கூடியிருக்கும் இசைக்கருவிகள்தான் தலையசைக்கும்படி இசையமைக்கிறது.
கூடியிருக்கும் சிறுதுளிகள்தான் தாகம்தீர்க்கும் தண்ணீராகிறது.
கூடியிருக்கும் சோற்றுப்பற்கள்தான் பசியாற்றும் படையலாகிறது.
கூடியிருக்கும் குடும்பங்கள்தான் நல்ல பல்கலைக்கழகமாகிறது.
கூடியிருக்கும் போதுதான் ஒவ்வொன்றும் பேரின்பம் தருகிறது.
ஆகவே என் நண்பர்களே, இறந்தகாலம் இறக்கட்டும். நிகழ்காலம் நல்லபடியே நடக்கட்டும். இனி எதிர்காலம் ஏறுமுகமாய் ஒற்றுமையுடன் இருக்கட்டும். கூடாது வாழ்ந்தால் கூடாது நன்மை - என்றும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒருமையை விலக்கி வைப்போம். ஒற்றுமையில் விலகாதிருப்போம்.
Make my answer brainllient and follow me for more answers