thayagathai potruvom tamil essay
Answers
Answer:
பெண்மையை போற்றுவோம்!
CONTENTS
முன்னுரை
முடிவுரை
முன்னுரை
உலக மகளிர் தினம். உலகமே கொண்டாடுகிறது. ஆண் வர்க்கம் பெண்களை அன்று ஒரு நாள் வானாளவ புகழ்ந்து பேசிவிட்டு அடங்கி விடுகிறது. இதுபோன்றே ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தில் தேசபக்தி பொங்கி அடங்கி விடுகிறது. இது தவறு. ரத்த அணுக்களில், சமுதாய உணர்வும், தேச பக்தியும் நம் மக்களுக்கும் பீரிட்டெழ வேண்டும். அதுவே நம் நாட்டிற்கு உடனடித் தேவையாக இருக்கிறது.
ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கும், கிராம மக்களுக்கும், கடும் உழைப்பை நல்குவதால் மாடுகளை பெருமைப்படுத்தவே, விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாடுகிறார்கள். இது மாடுகளுக்கு பொருந்தலாம். மகளிருக்கு எந்த காலத்திலும் பொருந்தாது. ஆண்டு முழுவதும், காலம் முழுவதும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள். புதுமைப் பெண்களடி, பூமிக்கே கண்களடி எனக் குறிப்பிட்டார் ஒரு கவிஞர். பூமிக்கு அவர்கள் கண்கள் மட்டுமல்ல. பூமிக்கு ஆதாரமே அவர்கள்தான்.
பெண்களை ஏறக்குறைய அடிமைகளை போன்று நடத்திய காலத்தில் மகாகவி பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார். "செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்துகொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்' என பேசி அக்ரஹாரத்திலேயே அதிசயத்தை துவக்கினார். அவர் விதைத்த விதை விருட்சமாய் வளர்ந்து பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், சில துறைகளில் அவர்களையும் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களைத் தெய்வமாக போற்றுவதுதான் நம் பண்பாடு. நதிகளுக்கு கூட கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.
இறைசக்தியை கூட சிவசக்தியாக, அர்த்த நாரீஸ்வரராக போற்றினார்கள். போற்றிக்கொண்டும் இருக்கின்றனர். இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காகவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பராமரிப்பதாகக் கூறி, பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள்.
பாரத நாட்டின் ஆன்மிக தத்துவ ஞானத்தை, உலக அளவில் உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார். தன்னை விரும்பிய 20 வயது பெண்ணிடம் தன்னை 25 வயது மகனாக ஏற்க அவரிடம் சுவாமிஜி வலியுறுத்தவே அந்த பெண் சுவாமிஜியிடம் மன்னிப்பு கோரினார்.
தாயார் ஜீஜீபாய் இல்லையென்றால், சிவாஜி சத்ரபதியாகியிருக்க வாய்ப்பேயில்லை. எதிரி முகாமிலிருந்து பிடித்து வந்த பெண்ணை தாயாக ஏற்று அதே முகாமிற்கு வீரர் மூலம் திருப்பி அனுப்பி வைத்தார் வீர சிவாஜி.
வீர சிவாஜி மட்டுமல்ல, எல்லோருமே யாரோ ஒரு பெண்ணிற்கு பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பெரும்பான்மை ஆண்களின் வாழ்க்கை அனுபவம். அந்தப் பெண் தாயாகவும் இருப்பாள்; தாரமாகவும் இருப்பாள்.
கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் பெண்கள் தங்கள் வாழ்வையே தியாகம் செய்கிறார்கள். ஆண்கள் குடும்பத்திற்காக எட்டு மணி நேரம் வேலை செய்தால், பெண்கள் நாள் முழுதும் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள்.
எல்லா பாசத்தையுமே துறந்துவிட்ட பட்டினத்தார், தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல் தவித்துப் புலம்பிப் பாடியது தாய்மையின் சிறப்புக்கு ஓர் உதாரணமாகும். படித்த பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பணியாற்றி குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். அதிகப் படிப்பு இல்லாத பெண்கள் சித்தாள், சாலை போடும் பணி போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.
ஆண்களின் வருமானம் தீயவழிகளில் செலவாகும் வாய்ப்புண்டு. பெண்களின் வருமானம் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது குடும்ப நலனுக்கே பயன்படும்.
குடும்ப பெண்களின் சிரமங்களைவிட, வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக வேலை பளுவுடன் நடைமுறையில் சில சிரமங்களையும் சந்திக்கின்றனர். குடும்பப் பெண்களை கிரகலட்சுமி எனக் கொண்டாடும்போது, வேலை பார்க்கும் பெண்களை நடமாடும் மகாலட்சுமி என்றே போற்ற வேண்டும்.
பெண்களிடம் நகை பறிப்பு, வன் கொடுமை போன்ற செய்திகள் வேதனை தருகின்றன. யாரோ சிலர் செய்யும் தவறால் ஆண் வர்கத்தையே குற்றவாளியாக்குவது முறையல்ல.
பெண்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது நகங்களையே ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என மகாத்மா சொன்னதை ஏற்றும், புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களை நினைத்தும், ஜான்சி ராணி, லட்சுமிபாய் போன்ற வீரமங்கைகளை நினைத்தும் துணிச்சலுடனும், தைரியத்துடனும் செயல்பட்டு துன்பத்தினின்று பெண்கள் மீள வேண்டும்.
சில மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலும் பிறந்தவுடன் கள்ளிபால் கொடுத்தும் அழிக்கப்படுகிறார்கள் எனும் செய்தி மனித குலத்திற்கு அவமானமாகும். இச்செயல்கள் தடுக்கப்படுவதற்கு சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் சேவையாற்றுகின்றனர்.