மேடைப்பேச்சின் கூறுகளை விளக்குக
நெடுவினாக்கள்
பேச்சுக்கலை
Answers
விடை:
மேடைப்பேச்சு எடுத்தல், தொடுத்தல், முடித்தல் என மூன்று கூறுகளைக் கொண்டது.
எடுத்தல் :
பேச்சைத் தொடங்குவது எடுத்தலாகும். பேச்சின் தொடக்கம் நன்றாய் இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் குறித்த நல்லெண்ணம் தோன்றாது. தட்டுத் தடங்கலின்றிப் பேசுவதற்குத் தொடக்கமே அடித்தளமாகும். கேட்போரை வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். பேசத் தொடங்கிய ஒரிரு மணித்துளிகளில் பொருளில் புகுந்து விடுவது பாராட்டுக்குரியது: இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.
தொடுத்தல் :
மலர்களின் நறுமண வேறுபாட்டையும் நிற வேறுபாட்டையும் உணர்ந்து, அவற்றினை இடையிடையே அமைத்து மாலைகள் தொடுப்பர். அது போல, பேச்சின் இடையிடையே சுவைமிக்க சொற்களையும் குணமிக்க கருத்துகளையும் பிணைத்துப் பேசுவதே தொடுத்தல் ஆகும். ஒவியன் ஒருவன் பல வண்ணம் தீட்டி இயற்கை வனப்பை உருவாக்கிக் காட்டுதல் போல, தாம் பேச எடுத்துக் கொண்ட செய்தியின் நுட்பங்களையும் கருத்துகளையும் பல தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்திப் பேசுதல் வேண்டும்.
வெறும் சுவர்கள் மட்டும் எழுப்பப்பட்டால் வீடுகள் அழகுற ஆகா. இடையிடையே அழகிய மாடங்கள், சாளரங்கள், வளைவுகள், தூண்கள் ஆகியவையும் அமைக்கப்படும் போது தான் வீடுகள் பொலிவு பெறும். அதுபோல, எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல வித நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமைந்ததே சிறந்த பேச்சாகும். உணர்ச்சி உள்ள பேச்சே ஊடுருவிச் சென்று கேட்போர் உள்ளத்தைப் பிணிக்கும். பேச்சாளர் உணர்ச்சிவயப்படாது கேட்போர் உள்ளத்தில் தாம் விரும்புகின்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
முடித்தல் :
பேச்சை முடிக்கும் போது பேச்சாளர் தமது கருத்தை, கேட்போர் மனத்தில் பதியுமாறு சுருங்கக் கூறி வலியுறுத்த வேண்டும். பேச்சின் முடிப்பே தனிச் சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கும். பொருளின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் எனப் பல முறைகள் உண்டு. இவ்வாறு நிறைவு செய்வதே அழகுற அமையும்.