புதுக்கவிதையின் உத்திகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக
Answers
Answer:
புதுக்கவிதை உத்திகள்
உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்திமுறைகள் புதுக்கவிதைகளில் பயன்படுத்தப் பெறுவதை இங்குக் காண்போம்.
உவமை
ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த
உலகமும் ஒன்றேதான் (தமிழன்பன்)
வாலிபன். . .
பிணம் விழுவதை
எதிர்பார்க்கும் கழுகாக
மணமேடையில்
உன்னை எதிர்பார்க்கிறான் . . .
அவன்மீது மட்டுமே
ஆத்திரப்படாதே (தமிழன்பன்)
என்னும் கவிதையில் வரதட்சணை வாங்கும் மணமகனுக்குப் பிணம் தின்னும் கழுகு செயலடிப்படையில் உவமையாகின்றது.
கோவலன் வருகைநோக்கிய கண்ணகியின் நிலை குறித்து,
வாங்க முடியாத
பொருள்கள் பற்றி நாம்
வர்த்தக ஒலிபரப்பில்
கேட்டுக் கொள்வதுபோல்
வருவான் கோவலன் என்று
தோழி சொன்னதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருந்தாள் . . . கண்ணகி (தமிழன்பன்)
என இடம் பெறும் கவிதையில் வினையுவமை அமைகின்றது.
உருவகம்
உவமையும் பொருளும் வேறுவேறல்ல; ஒன்றே எனக் கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும். புல் குறித்து அமைந்த கவிதையொன்று பின்வருமாறு:
பச்சை நிறத்தின் விளம்பரமே!
குசேலரின் உணவுக் களஞ்சியமே!
குதித்தோடும் கடல்நீரைக் காதலிக்காமலே
உப்புருசி பெற்றுவிட்ட
ஓவியப் புல்லே
(நா.காமராசன்)
படிமம்
உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது. முற்றுருவகப் பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.
கை ஓய இருளை விடியும்வரை
கடைந்த இரவு
ஒரு துளி வெண்ணெயாய் உயரத்தில்
அதை வைத்துவிட்டு நகர்ந்தது
(தமிழன்பன்)
என்பதில் விடிவெள்ளி குறித்த படிமம் காணப்படுகின்றது.
நட்சத்திரங்களைக் குறித்தமைந்த படிமமாக,
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின்
துண்டுகள்
(தமிழன்பன்)
என்பது அமைகின்றது.
குறியீடு
சொல் என்பதே குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் குறியீடாகும். சில சொற்கள் மற்றொன்றிற்காக நிற்பதும், மற்றொன்றின் பிரதிநிதியாகச் செயல்படுவதும், மற்றொன்றைச் சுட்டிக் காட்டுவதும் ஆகிய நிலைகளில் அமைவதுண்டு. தன்னோடு நெருக்கமான தொடர்புடைய பொருளைக் குறித்த உணர்வினைக் குறியீடு தோற்றுவிக்கின்றது.
குறியீட்டை இயற்கைக் குறியீடு, தொன்மக் குறியீடு, வரலாற்றுக் குறியீடு, இலக்கியக் குறியீடு என வகைப்படுத்தலாம்.
இயற்கைக் குறியீடு
வறுமையில் வாடும் மக்களைக் குறித்து அமைந்த கவிதை
இலையுதிர்காலம் இல்லாமலேயே
உதிருகின்ற உயர்திணை மரங்கள்
(தமிழன்பன்)
என்னும் கவிதை இதற்குச் சான்றாகும். மரங்களாவது பருவ காலச் சூழலுக்கேற்பத்தான் இலைஉதிர்க்கும். ஆனால் பட்டினிச்சாவில் பலியாவோருக்குப் பருவம் ஏது?
தொன்மக் குறியீடு
தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.
சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.
ஓர் அடியை
முதலாளித்துவ
முடிமேல் வைத்து
ஓர் அடியை
நிலப்பிரபுத்துவ
நெஞ்சில் ஊன்றி
ஓர் அடியை
அதிகார வர்க்கத்தின்
முகத்தில் இட்டு
மூவடியால்
முறைமை செய்ய
எழுகிறது (தமிழன்பன்)
வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.
அங்கதம்
அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்; சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு
(மேத்தா)
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !
(ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று ! (மேத்தா)
அரசியல் அங்கதம்
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள் !
(தமிழன்பன்)
மற்றவர்
குனியும்போது
ஆகாயத்தையும். . .
நிமிரும்போது
நிலத்தையும். . .
சுருட்டிக்கொள்ள
வல்லமை படைத்த
அரசியல்வாதிகள். . .
இந்த
வாக்குச் சீட்டுக்களை
வழிப்பறி செய்வது . . .
கடினமானதல்ல. . .
முரண்
சொல் முரண், பொருள் முரண், நிகழ்ச்சி முரண் என இதனை வகைப்படுத்தலாம்.
சொல் முரண்
நாங்கள்
சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நீங்கள்
சோற்றில்
கைவைக்கமுடியாது !
இறப்பதற்கே
பிறந்ததாய் எண்ணிப் பழகியதால்
நமது
மூச்சில்கூட நாம் வாழ்வதில்லை
மரணம் வாழ்கிறது !
(தமிழன்பன்)
பொருள் முரண்
பொருளில் முரண் அமையத் தொடுப்பது இது.
மதங்களின் வேர்கள் தந்தது
ஆப்பிள் விதைகள்தான்
ஆனால் அதன்
கிளைகளில்தான் கனிகிறது
நஞ்சுப் பழங்கள்
(பா. விஜய்)
கரியைப்
பூமி
வைரமாக மாற்றுகிறது – எமது
கல்வி நிலையங்களோ
வைரங்களைக்
கரிகளாக்கித் தருகின்றன
(தமிழன்பன்)
நிகழ்ச்சி முரண்
கிடைத்தபோது
உண்கிறான்
ஏழை
நினைத்தபோது
உண்கிறான்
பணக்காரன்
(மு.வை.அரவிந்தன்)
வாழ்க்கை இதுதான்
செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்
சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை
(அறிவுமதி)
சிலேடை
காமத்துப்பால்
கடைப்பால் என்றாலே
கலப்புப்பால் தான் !
(அப்துல் ரகுமான்)
என்னும் கவிதையில், கடை என்பது, விற்பனை நிலையம்,
கடைசி என்னும் பொருள்களையும், கலப்பு என்பது பாலும் நீரும் கலப்பு,
ஆண் பெண் கலப்பு என்னும் பொருள்களையும் தந்து
சிலேடையாகத் திகழ்வதைக் காணலாம்.
இருண்மை
எடுத்துக்காட்டு :
தேசிய இறைச்சிகளான நம்
பரிமாற்றம்
ஆரம்பிக்காமல் முடிந்துவிட்டது.
(தேவதச்சன்)
நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமேயில்லை
(நகுலன்)
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
(பிரமிள்)
Explanation:
Hope it is helpful