தொல்லியல் துறைப்பற்றி எழுதுக
நெடுவினாக்கள்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
Answers
விடை:
தொல்லியல் துறையின் நோக்கம்:
பழங்காலத்தைப் பற்றி ஆய்வு செய்தலையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்கிறோம். தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், வணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவைபற்றி ஆய்ந்தறிதலே தொல்லியலின் முதன்மையான நோக்கம்.
எச்சங்களின் பயன்பாடு:
முன்னோர் விட்டுச்சென்ற எச்சங்களான கல்வெட்டுகள், கட்டடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியவற்றை அடிப்படையாய்க் கொண்டு தொன்மைக்கால மக்களின் வாழ்வியலை ஆய்ந்தறிவர். தொல்லியலை ஆங்கிலத்தில் "ஆர்க்கியாலஜி" என்கிறோம். தொல்லியல் ஆய்வு இல்லையேல், மனிதன் கடந்து வந்த பாதையையும், அவன் வரலாற்றையும் அறிய இயலாது போயிருக்கும்.
தொன்மைக்காலம் என்பதற்கான காலவரையறை:
மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து வரலாற்றுக்கு முந்தைய காலம்வரை உள்ள காலத்தையே தொன்மைக்காலம் என்கிறோம்.
தொல்லியல் நிகழ்வுகளை கண்டறியும் முறை :
அவ்வப்போது திட்டமிட்டுச் செய்யப்படும் ஆய்வுகளின்போதோ, தற்செயலாய்க் கிடைக்கும் தடயங்கள், எச்சங்களின் உதவியுடனோ தொன்மைக்கால நிகழ்வுகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.
அகழாய்வுக்குப் பயன்படும் இலக்கியங்கள் :
ஒரு நாட்டின் பழமையான இலக்கியங்கள் அகழ்வாய்விற்குரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாய் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தின் சிற்றூர்கள், நகரங்கள், துறைமுகங்கள், கோட்டைகள், அரண்மனைகள் முதலியவற்றைப்பற்றிய குறிப்புகள் பரவலாய்க் காணப்படும். அவற்றின் துணை கொண்டு அகழாய்வு செய்வதற்கான இடங்களைத் தீர்மானிக்க இயலும். தொல்லியல் ஆய்வுகளின் மூலம், நம் முன்னோர்களது காலத்தைப்பற்றியும் அவர்களின் சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள இயலும்.