CBSE BOARD X, asked by ganu77, 1 year ago

மாணவர்களும் சமுதாயமும் கட்டுரை

Answers

Answered by karunjoseph
29

Answer:

குறிப்புச்சட்டம்

1.முன்னுரை

2.மாணவர் இயக்கங்கள்

3.தூய்மைப்பணி

4.நிலத்தைப் பேணுவதில் மாணவர் பங்கு

5.காற்று, நீரைக் காப்பதில் மாணவர் பங்கு

6.கற்பித்தலில் மாணவர் தொண்டு

7.சுகாதாரப்பணி

8.போக்குவரத்தில் மாணவர் தொண்டு

9.முடிவுரை

முன்னுரை

      மாண்பினைக் கற்றுக்கொண்டு அம்மாண்பினால் மற்றவர்களுக்கு உதவுபவர்களே மாணவர்கள் ஆவர். அம்மாணவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு பற்றிக் காண்போம்.

மாணவர் இயக்கங்கள்

      ஒன்றுபட்டு தொண்டு செய்ய மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களின் மூலம் சமுதாயத்திற்குத் தொண்டு செய்கின்றனர்.

தூய்மைப்பணி

      “சுத்தம் சோறு போடும்”; “சுத்தம் சுகம் தரும்” என்பன தூய்மையைக் கடைப்பிடிக்கத் தூண்டும் பழமொழிகளாகும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் மாசுபடுவதைத் தடுப்பதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும்.

நிலத்தைப் பேணுவதில் மாணவர் பங்கு

      குப்பை கூளம், கழிவுப்பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பாலிதின் பைகள், பயனற்ற மின் அணுப் பொருள்கள் முதலியவற்றால் நிலம் மாசுபடுகிறது, இவ்வாறு நிலம் மாசுபடுவதை மாணவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும் அவற்றை மாணவர்கள் அப்புறப்படுத்தி மக்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

காற்று, நீரைக் காப்பதில் மாணவர் பங்கு

        புகையால் காற்று மாசுபடுவதையும் அமிலக் கழிவுகளால் நீர் மாசுபடுவதையும் மாணவர்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கற்பித்தலில் மாணவர் தொண்டு

      கிராமந்தோறும் சென்று கல்வி அறிவில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் மாலை நேரத்தில் கற்பித்தல் வேண்டும். அறியாமை இருள் அகற்றும் ஆதவனாக மாணவர்கள் திகழ வேண்டும்.

சுகாதாரப்பணி

      தூய்மைக் குறைவால் காய்ச்சல், காலரா, சளி இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதை மக்களுக்கு மாணவர்கள் எடுத்துக் கூற வேண்டும். சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

போக்குவரத்தில் மாணவர் தொண்டு

       அரசின் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க மாணவர்கள் காவலர்களுடன் மக்களுக்கு உதவ வேண்டும். திருவிழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் மக்களை ஒழுங்குபடுத்த காவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

முடிவுரை

       மாணவரால் முடியாதது எதுவுமில்லை. இந்தச் சமுதாயம் சீர்பெற மாணவர்கள் அனைத்துத்துறைகளிலும் பங்குபெற வேண்டும். ஒன்றுபட்ட வளமான இந்தியாவை உருவாக்க மாணவர்களின் தொண்டு மிகமிக இன்றியமையாததாகும்.     

Similar questions