1. சட்ட வகைகள் குறித்துக் கட்டூரை எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter12 அன்றாட வாழ்வில் சட்டம்-
Page Number 78 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
சட்ட வகைகள்
முன்னுரை :
மனிதன் சேர்ந்து வாழத் தலைப்பட்டபொழுது தான் வாழ்க்கை முறையினை ஒழுங்குபடுத்த சட்டங்கள் தோன்றின. சட்டம் என்பதற்கு செம்மை என்று பொருள். செம்மை என்பதற்கு நடுவு நிலைமை என்னும் பொருளும் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. மனிதன் நடுவு நிலைமையில் வாழ உருவாக்கப்பட்ட சட்டங்கள் பல.
அரசியல் அமைப்புச் சட்டம் :
சட்டங்கள் பலவகைப்படும். இது, நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டம். நாட்டின் நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்கள், அரசுத்துறை அலுவலகங்கள் ஆகியன இதன் அடிப்படையில் இயங்கும். நாட்டிலுள்ள அனைத்து வகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்புச் சட்டமே. மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகள் இச்சட்டத்தின் மூலந்தான் காக்கப்படுகின்றன. உலக நாடுகளிடையே உள்ள தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை அனைத்து நாட்டு சட்டம் என்கிறோம்.
சமயச் சார்புச் சட்டங்கள் :
இந்தியா சமயச் சார்பற்ற நாடு. எனினும் மக்கள் தாங்கள் பின்பற்றும் சமயங்களுக்கு ஏற்ப வாழ உரிமையுடையவர். அதனால் இந்துக்களுக்கு இந்து சமயச் சட்டமும், இசுலாமியருக்கு இசுலாமியச் சட்டமும், கிறித்தவருக்கான சட்டமும் உள்ளன.
மாநிலச் சட்டங்கள் :
மாநிலங்களுக்கெனப் பொதுச்சட்டங்கள் உள்ளன. அவை தவிர, அந்தந்த மாநிலங்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கேற்ப மாநிலச் சட்டமன்றங்களே சட்டங்களை இயற்றிக் கொள்கின்றன.
போக்குவரத்துச் சட்டம் :
இச்சட்டம் போக்குவரத்தினை முறைப்படுத்துவதற்கானது. இது வண்டிகள் எவ்வழியில் செல்ல வேண்டும், எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், எப்போது நின்று புறப்பட வேண்டும், எம்முறைகளிலெல்லாம் வண்டிகளை ஒட்டக்கூடாது என்பன போன்ற பல விதிகளைக் கொண்டிருக்கும்.
மாணாக்கர் வன்கொடுமைத் தடைச்சட்டம் :
ஏற்கெனவே கல்லூரியில் பயிலும் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களை "ராகிங்" என்னும் பெயரில் பல விதமாய்த் துன்புறுத்துகின்றனர் அவற்றைத் தடுக்கும் பொருட்டு இச்சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் :
குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பைப் பெற விரும்பும் முதலாளிகள், குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். இதைத் தடுக்கவே குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டங்கள் உள்ளன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் :
மக்கள் வாங்கும் பொருள்களில் உள்ள குறைபாடுகளை தடுக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மாநில அல்லது மாவட்டக் குறைதீர் மன்றங்களையோ நுகர்வோர் பாதுகாப்புக் குழுவையோ அணுகித் தீர்வு காணலாம். பொது இடங்களில் புகை பிடித்தல், புகையிலை போட்டுத் துப்புதல் போன்ற தீமை தரும் நிகழ்வுகளைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப் பெற்றுள்ளது.
கையூட்டுத் தடுப்புச் சட்டம் :
அரசுத்துறையில் பணிபுரிவோருள் சிலர், ஒரு பணியை நிறைவேற்றித் தருவதற்காகக் கையூட்டாகப் பணம் கேட்பதற்குத் தண்டனை அளிப்பதற்கான வகை செய்வது, இச்சட்டம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் :
அரசு அமைப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி மக்கள் அறியவும், தாங்கள் செலுத்திய வரிப்பணம் எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியவும் தகவல் பெறுவதற்கான வழிவகைகளைக் கூறுகிறது, இச்சட்டம். ரூ 10 கட்டணம் செலுத்தி, ஒரே விண்ணப்பத்தில் எத்தனை தகவல் வேண்டுமானாலும் பெறலாம்.
முடிவுரை :
அன்றாட வாழ்வில் மக்களின் நலன் காக்க, குற்றங்களை நீக்க இது போன்ற பல சட்டங்கள் உள்ளன. அவற்றினை அனைவரும் அறிந்து கொண்டு தனக்கு இழைக்கப்டும் குற்றங்களிருந்து, நீதிமன்றங்களை நாடி பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்று திருக்குறள் கூறுவதனை எண்ணிப்பார்த்து சட்டங்களை மதிப்போம்; குற்றம் களைந்த வாழ்க்கை வாழ்வோம். சட்டம் நம்மை காக்கும்.