eassy writing
topic: maanudam payanpada vazhndha perunthalaivar
Answers
யார் வரலாறு?
இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு.
கடவுளா, கல்லா?
மதம் சார்ந்த தொன்மங்கள் (புராணக் கதைகள்) சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்களையும் இழிவுபடுத்தப் புனையப்பட்ட பொய்ம்மைகள், கற்பனைகள் என்ற பெரியார், அவற்றைப் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தினார். 1924-ல் வைக்கம் கோயிலில் உள்ள சிலையை, ‘துணி வெளுக்க உதவும் சாதாரணக் கல்’ என்று விவரித்தார். இவ்வகை விமர்சனம், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
சுயமரியாதையை மீளப்பெறுதல்
மாற்றம் என்பது வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை; ஒருமுகப்பட்ட மனித முயற்சியை, தலையீட்டை அது வேண்டுகிறது. எனவே, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் இப்போது செயலாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். அதன்மூலம் இழந்துபோன சுயமரியாதையை மீளப்பெறுதல் வேண்டும். சுயமரியாதையை நாம் பெற்றுவிட்டால், சுதந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடும்; மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பது பெரியாரின் கருத்து.
யார் போராடுவது?
அநீதிக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளானவர்கள் சுயமரியாதையால் உந்தப்பட்டு, தாம் தமக்காகவே கிளர்ந்து எழும்போதுதான் விடுதலை கிடைக்கும் என்பது பெரியாரின் நம்பிக்கை. பெண் விடுதலைக்காக ஆண்கள் மட்டுமே குரல் கொடுப்பதை ஏற்காத அவர், பெண்கள்தான் அதற்கான அரசியலைத் தங்கள் கையிலெடுத்துப் போராட வேண்டும் எனக் குறிப்பிடுவதைச் சான்றாகக் காட்டலாம்: “எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?” என்றார் பெரியார்.
பெரியாரின் நவீனத்துவம்
தன்னுடைய சமத்துவம் அடிப்படையிலான தேசியத் தேடலுக்குப் பயன்படாத, இந்திய / தமிழ்ப் பழமை பெரியாரைப் பரிதவிக்கச் செய்யவில்லை. மாறாக, தன்னுடைய தேசியத் தேடலைப் பழமையிலிருந்து விடுத்து, எதிர்காலத்தில் நிலைகொள்ள வைத்தார். “மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது; அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது பெரியாரது உறுதியான நிலைப்பாடு.
பெரியாரின் மொழி
தேச உருவாக்கத்தின் மையக் கூறான மொழிபற்றிய அவரது கருத்தும் இந்தப் பகுத்தறிவு வயப்பட்ட விமர்சனத்துக்கு உட்பட்டதே. மொழி என்பது பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக, சமதர்மம், சுதந்திரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக அமைய வேண்டும். துளசி ராமாயணம் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான நூல்களைப் படிக்கவே இந்தி உதவும் என்ற வாதத்தை முன்வைத்து, பெரியார் இந்தியைத் தாக்கினார். ‘‘சொர்க்கத்துக்குப் போக இந்தி உதவலாம். ஆனால், அதற்குள் சொர்க்கம் போய்விடும்’’ என்றார். இந்தியோடு ஒப்பிடுகையில் தமிழ் சிறந்தது என்றார். எனினும், அதிலும் குறைபாடு உண்டென்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை. பகுத்தறிவுத் தளத்திலிருந்து தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. “எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை” என்றார்.
பகுத்தறிவு ஒரு நெடும் பயணம்!
மானுட விடுதலை அடிப்படையிலான தேசிய உருவாக்கம் முடிவற்றதொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந்தோறும் எதிர் கொள்ளும் என்பதை அவர் மனம் கொண்டிருந்தார். “பகுத்தறிவு என்று சொல்வது மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவை எவை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் எனத் தள்ளப்படலாம்… அதுபோலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஒருகாலத்தில், ‘ராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’என்றும் கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி: காலத்தின் சின்னம்” என்றார் பெரியார்.
எல்லையற்ற தேசம்
தேசியம் என்பது ஒரு தேடலே அன்றி, ஒரு முடிவான உருவாக்கம் அல்ல எனும் கருத்தின் அடிப்படையில்தான், பெரியார் தான் தேடிய தேசத் துக்குப் புவியியல் எல்லைகளைத் தெளிவாக வகுப்பதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை. தாம் கருதியுள்ள தேசத்தில் இந்தியாவிலுள்ள சூத்திரர் எல்லோருக்கும் இடமுண்டு என்று தெரிவித்தார். வருணா சிரமத்தை மறுக்கும் ஜப்பானியரும்கூட பெரியாருக்கு திராவிடர்களே. இவ்வாறாக, அவருடைய தேசம் மொழி, கலாச்சார அடிப்படையில் புவியியல் எல்லைகளை வகுக்க மறுத்தது. எல்லைகளை மீறி ஒடுக்கப்பட்டோர் இணைந்து விடுதலை தேடுவதே அதன்கூறு!
ஏன் எதிர்த்தார்?
கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள் அனைத்தையும் ஒருசேர பெரியார் எதிர்த்தமைக்குக் காரணம், உருவாகி வந்த இந்திய தேசத்தில் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் சமமான குடியுரிமையைப் பெறுவதற்கு இவை தடையாக உள்ளன என்பது பெரியாரின் புரிதலாகும். ஒரு தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் சமமான, தற்சார்புடைய குடியுரிமைதான் அடித்தளம் என்று அவர் கருதினார்.