India Languages, asked by StarTbia, 1 year ago

அப்பூதியடிகளார் இல்லத்தில் நிகழ்ந்ததனை விவரிக்க.
நெடுவினாக்கள்
பெரியபுராணம்

Answers

Answered by gayathrikrish80
1

விடை:


அப்பூதியடிகளார் இல்லத்தில் நிகழ்ந்தவை :


அமுதுண்டு அருள வேண்டுதல் :


அப்பூதியார், தம்மைக் காணவந்தவர் திருநாவுக்கரசர் என்பதறிந்து மலர் போன்ற கரங்களைத் தலைமேல் குவித்து நாவுக்கரசரின் திருவடித்தாமரைகளை தலையால் வணங்கினார். தம் இல்லத்தில் அமரச்செய்து பூசித்தார். அமுதுண்டு அருள வேண்டுமென வேண்டினார். நாவுக்கரசர் தம்மீதுள்ள அவரின் பற்றைக்கண்டு வியந்து அவரது வேண்டுகோளுக்கு இசைவு தந்தார். அப்பூதியாரின் மனைவியார் அறுசுவையுடன் உணவு சமைத்தார். அடியவர் அமுதுண்ண வாழைக்குருத்தை அரிந்து கொணருமாறு பெற்றோர் இருவரும் தம் மைந்தருள் மூத்த திருநாவுக்கரசை அனுப்பினர்.


துயரத்தை மறைத்து அன்பினைப் போற்றுதல் :


மூத்த திருநாவுக்கரசு, ‘நான் இச்செயல் செய்யும் பேறு பெற்றேன்" என்று எண்ணி விரைந்து ஓடினான். வாழைத் தோட்டத்தில் வளமான ஒரு வாழைக்குருத்தை அவன் அரியும்போது பாம்பு ஒன்று அவன் துன்புற்றுச் சோர்வுறுமாறு கையில் தீண்டிவிட்டது. அவன் வாழைக்குருத்தைத் தாயினிடம் தந்துவிட்டுத் தரையில் விழுந்தான். விழுந்த மகனைக் கண்டு தாயும் தந்தையும் உளம் பதைத்தனர். பாம்பு கடித்த இடத்திலிருந்து இரத்தம் வழிவதையும், உடலில் தோன்றிய அடையாளங்களையும் பார்த்து, அவன் நஞ்சு ஏறி இறந்தான் என்று தெரிந்துகொண்டனர். தெரிந்தும், இது அறிந்தால் நாவுக்கரசர் தம் விட்டில் உணவு உண்ண மறுத்துவிடுவாரோ என்று எண்ணி அப்பெரும் பேற்றைத் தவறவிட மனமில்லாதவர்களாக அத்துன்பம் சிறிதும் தெரியாவண்ணம் நாவுக்கரசரிடம் சென்று அமுது செய்ய எழுந்தருள வேண்டினர்.


இப்போது இங்கு அவன் உதவான்:


நாவுக்கரசர் உண்ணும் முன் எல்லோர்க்கும் திருநீறு வழங்கினார். புதல்வர்களுக்கு வழங்கும்போது மூத்த திருநாவுக்கரசைக் காணாமையால் அவனையும் அழைக்குமாறு கூறினார். அதற்கு அப்பூதியார், நடந்தது எதுவும் கூறாமல், 'இப்போது இங்கு அவன் உதவான்' என்றார். இறைவன் பாவிசை பாடிப் பாம்பின் நஞ்சினை நீக்கினார் : அது கேட்ட நாவுக்கரசரின் திருவுள்ளத்தில் இறைவன் அருளால் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதனால் அவர் அப்பூதியாரை நோக்கி, "தாங்கள் கூறியதை என் மனம் ஏற்காது. தாங்கள் இவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். உண்மையைக் கூறுவீராக” என்றார். திருநாவுக்கரசர் கேட்ட பின்பும் உண்மையை மறைத்தல் ஒழுக்கமன்று என்று எண்ணி, மைந்தனுக்கு நேர்ந்த துன்பத்தை வருத்தத்துடன் கூறினார். அது கேட்டு நாவுக்கரசர், "தாங்கள் செய்தது மிக நன்றாய் உள்ளதே. இங்ஙனம் செய்வர் உலகில் எவர் உள்ளார்?" என்று வியந்து, விரைந்து எழுந்தார். அப்பூதியாருடன் சென்று இறந்து கிடந்த மூத்த திருநாவுக்கரசின் உடலைக் கண்டார். 


இறைவன் அருளை வேண்டி ‘ஒன்று கொலாம்’ என்று தொடங்கும் பாவிசைப் பதிகம் பாடிப் பாம்பின் நஞ்சு நீங்கச்செய்து மூத்த திருநாவுக்கரசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார்.

 

Similar questions