அப்பூதியடிகள் திருநாவுக்கரசர்மேல் கொண்டிருந்த பற்றினை விவரிக்க.
நெடுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
கள்ளமில்லா உள்ளம் :
அப்பூதியார் நடராசப்பெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டவர்; களவு, பொய், காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கியவர். அப்பூதியடிகள் சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பையும், சிவபெருமான் அவருக்கு அருள் செய்த திறத்தையும் கேட்டு, அவரை நேரில் காணாமலே நாவுக்கரசர் மேல் பெரும் பக்தி கொண்டார். அவரைக் காணவேண்டும் என்னும் பேராவலுடையவராயிருந்தார்.
எங்கும் எதிலும் திருநாவுக்கரசரின் திருநாமம் :
திருநாவுக்கரசரிடம் தாம் கொண்ட நிகரற்ற பக்தியினால் தம் வீட்டில் உள்ள படி, மரக்கால், தராசுக்கோல், தம் மக்கள், பசு, எருமை ஆகிய எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே இட்டு வழங்கி வந்தார். திருநாவுக்கரசர், அப்பூதியார் வாழும் திங்களூர் வந்து சேர்ந்தார்; அளவற்ற மக்கள் போக்குவரவுடைய வழியில் தண்ணீர்ப்பந்தல் ஒன்றைக் கண்டார்; அதன் எல்லாப் பக்கங்களிலும் திருநாவுக்கரசு என்னும் தம் பெயர் எழுதப் பட்டிருப்பதைக் கண்டு திகைத்தார். அப்பந்தலை அமைத்தவர் அப்பூதியடிகளர் என அறிந்து, அவரைக் காண அவர் வீடு தேடிச் சென்றார்.
அப்பூதியடிகளின் சினம் :
அப்பூதியடிகளார், தம்மைக் காணவந்த வந்த, அவரின் திருவடிகளை வணங்கி, "தாங்கள் வந்த காரணம் என்னவோ?" என்று அன்புடன் வினவினார். நாவுக்கரசர், “சிவனடியார்களுக்காகத் தாங்கள் வைத்துள்ள தண்ணீர்ப்பந்தலில் தங்கள் பெயரெழுதாமல் வேறொருவர் பெயர் எழுதக் காரணம் என்ன?" என்று கேட்டார். அது கேட்டு அப்பூதியார் கடுஞ்சினம் கொண்டார்; “கல்லே தெப்பமாய் மிதக்கக் கடல் கடந்து கரையேறிய நாவுக்கரசர் பெருமையை அறியாதாரும் உளரோ? மங்கலமாகிய சிவனடியார் வேடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டீரே? நீர் யார்?" என்று கேட்டார்.
இன்னார் என உணர்ந்த நிலை :
நாவுக்கரசர் தாம் இன்னார் எனக் கூறக் கேட்ட அப்பூதியார், தம் கைகளைத் தலைமேல் குவித்து, கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிய, உடல்மயிர் சிலிர்க்க, உரை தடுமாறத் தரையில் விழுந்து நாவுக்கரசரின் திருவடித் தாமரைகளை, மலர் போன்ற தன் கைகளை குவித்து தலைமேற்கொண்டு வணங்கினார். இருக்கையில் அமரச் செய்து பூசித்து வழிபட்டார்.
அமுதுண்ன அழைத்தல் :
பின்னர் அப்பூதியார், நாவுக்கரசரைத் தம் இல்லத்தில் அமுதுண்ண வேண்டினார். நாவுக்கரசர் இசையவே அப்பூதியாரின் மனைவியார் அறுசுவையுடன் உணவு சமைத்தார். அடியவர் அமுதுண்ன வாழைக்குருத்தை அரிந்து கொணருமாறு பெற்றோர் இருவரும் தம் மைந்தருள் மூத்த திருநாவுக்கரசை அனுப்பினர். கொணரச் சென்ற மூத்த திருநாவுக்கரசைப் பாம்பு ஒன்று தீண்டி இறந்தான். இதை நாவுக்கரசர் அறிந்தால் தம் வீட்டில் உணவு உண்ணும் பேற்றைத் தவறவிடுவோம் என்று மகனின் மரணத்தை மறைத்து, நாவுக்கரசருக்கு அது சிறிதும் தெரியா வண்ணம், நாவுக்கரசரிடம் சென்று அமுது செய்ய எழுந்தருள வேண்டினார். நாவுக்கரசர் உணவு உண்ணும் முன் எல்லோர்க்கும் திருநீறு வழங்கினார். புதல்வர்களுக்கு வழங்கும்போது மூத்த திருநாவுக்கரசைக் காணாமையால் அவனையும் அழைக்குமாறு கூறினார். அதுகேட்ட அப்பூதியார் நடந்தது எதுவும் கூறாமல் 'இப்போது இங்கு அவன் உதவான்' என்று மகன் இறந்த துன்பத்தையும் மறைத்து, நாவுக்கரசர் அமுதும் அருளை பெரிதெனக் கொண்டார்.
இவைகளால் அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் மேல் கொண்டிருந்த பற்று விளங்கும்.