தமிழ் எவ்விதம் செழித்து வளர்ந்ததாக தமிழ்விடு தூது கூறுகிறது?
நெடுவினாக்கள்
தமிழ்விடு தூது
Answers
விடை:
தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக தமிழ்விடு தூது கூறுவன பின்வருமாறு:
விளைநிலம் :
செய்யுள், வயலாய் அமைந்தது. அச்செய்யுளுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்கள் வயலுக்கு வரப்புகள் ஆகின; தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் அதற்கு மடைகளாக அமைந்தன.
ஏர் :
சொல்லேருழவர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நாற்கரணங்களையே ஏர்களாகப் பூட்டி உழுதனர்.
விதையும் விளைபொருளும் :
வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மகதம் ஆகிய நான்கு நெறிகளையே விதைகளாய் விதைத்தனர். அவை வளர்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நன்னெறிகளை விளைவித்தன.
களை :
கல்லாமலே தாமும் கவிஞர் எனக் கற்றோர் சபையை நாடி வரும் புன்கவிகளாகிய போலிப்புலவர்கள், பைந்தமிழ்ப் பயிருக்குக் கேடு விளைவிக்கும் களைகளாய்த் தோன்றினர்.
களை எடுத்தல் :
தமிழ்ப்பாட்டு இசைப்பதையே தம் தொழிலாய்க் கொண்ட பிள்ளைப்பாண்டியன் என்னும் அதிவீரராம பாண்டியரும், வில்லிபுத்தூராரும், ஒட்டக்கூத்தரும் போலிப்புலவர்களைத் தலையில் குட்டியும், காதில் துறடு மாட்டி அறுத்தும், தலையிறங்கப்போட்டு வெட்டியும் களை பறித்ததால், பைந்தமிழ்ப் பயிர் தூர் கட்டி வளர்ந்து செழித்தது. இவ்வாறு தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக தமிழ்விடு தூது கூறுகிறது.