இக்கதையில் வரும் இருவேறு குடும்பங்களின் இயல்பினை விளக்குக.
நெடுவினாக்கள்
குறட்டை ஒலி
Answers
விடை:
இக்கதையில் வரும் இருவேறு குடும்பங்களின் இயல்புகள் :
ஒரு குடியிருப்பில் மூன்று குடும்பங்கள் வாழ்ந்தன. கீழே உள்ள இரு குடும்பங்களுள் ஒன்று, செல்வச் செழிப்பில் வாழ்வது; கணவன், மனைவி ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் இல்லாத குடும்பம். மற்றொன்று, வறுமையில் வாழும் குடும்பம்; கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், பாட்டி ஒருத்தி, ஒரு நாய் என்று பெருகிய குடும்பம். ஏழையின் மனைவி ஏழாவது குழந்தையை ஈன்றாள். அந்தக் குழந்தையின் அழுகை ஒலி கேட்கும். அவர்கள் வீட்டு நாயும் ஐந்து குட்டிகளை ஈன்றது. குட்டி ஈன்ற மூன்றாம் நாள் வெளியே சென்ற தாய்நாய், வீடு திரும்பவில்லை. குட்டி நாய்கள் பசியால் துடித்துப் பாலுக்கு ஏங்கிக் ‘கய்ங், கய்ங்' என்று ஓலமிட்டன.
செல்வச் செழிப்பான குடும்பத்தின் இரக்கமற்ற தன்மை :
செல்வக் குடும்பத்தினருக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன; குழந்தைச்செல்வம் இல்லாமல் ஏங்குகிறார்கள். அவர்கள் தாமுண்டு, தம் குடும்பம் உண்டு என்று செழிப்புடன் வாழ்பவர்கள். அவர்கள் வீட்டில், பொருள்கள் வைத்தவை வைத்தபடி இருக்கும். அந்த வீட்டில் அவரவர்களின் தும்மல், இருமல், ஏப்பம், கொட்டாவி ஆகிய தவிர வேறு எந்த ஒலியையும் கேட்க முடியாது.
நாய்க்குட்டிகளின் ஒலியைச் செல்வக் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது தங்களின் அமைதியைக் குலைப்பதாய் அவர்கள் கருதினார்கள்; குட்டிகளைத் தொலைவில் கொண்டுபோய் விட்டுவிட்டால் வழியில் போவோர் ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். நாமும் நிம்மதியாய்த் தூங்கலாம்” என்று இரக்கமற்று கூறினர்.
செல்வர் மனைவி குங்குமப் பூவும் சர்க்கரையும் கலந்து சுண்டக் காய்ச்சின பாலை வயிறாரப் பருகினாள்! அந்த வீட்டிலிருந்து பலமான ஏப்ப ஒலி வெளி வந்தது. செல்வர் குடும்பம் மழலையர் ஒலி கேட்காத குடும்பம். செல்வர் மனைவி நாய்களின் துன்பத்தைப் பெரிதாய்க் கருதாது தன் தூக்கத்தையே பெரிதாய்க் கருதினாள். அவள், தான் பருகவிருக்கும் பாலை நாய்க் குட்டிகளுக்குக் கொடுக்கலாம் என்னும் கருணை உள்ளம் இல்லாதவள்; தானே உண்டு ஏப்பம் விட்டு மகிழும் கல்மனம் கொண்டவள்; பிறர் நலம் கருதாமல் தன்னலம் போற்றும் தகைமையினள்; எத்தகைய கவலையும் இல்லாமல் செல்வர் குடும்பத்தினர் சுகமான தூக்கத்தை மேற்கொண்டு குறட்டை ஒலி எழுப்புபவர்கள்.
ஏழைத் தாயின் கருணை :
வறுமைக்குடும்பத்தில் ஆரவாரம் மிகுந்து இருக்கும். குழந்தைகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு அமர்க்களம் செய்யும். தாய்க்கும் தந்தைக்கும் அக்குழந்தைகளின் வழக்கைத் தீர்ப்பதே பெரிய வேலை. பாட்டி, பாக்கு உலக்கையால் வெற்றிலைபாக்கை இட்டு, 'லொட் லொட்" என்ற குற்றும் ஒலி கேட்கும். அவர்கள் வளர்க்கும் நாய், தெருவழியே போவோரைப் பார்த்து உறுமிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் இருக்கும்.
தாய்நாய் காணாமல் போனதும் பசியால் பாலுக்கு ஏங்கிய நாய்குட்டிகள் ஓயாமல் கய்ங் கய்ங்’ என்று கத்தியதைக் கண்டு ‘பாட்டி, தன் மருமகளிடம் “என்னடியம்மா இந்தக் குட்டிகள் எல்லாம் இப்படிக் கத்துதே கவனிக்கக்கூடாதா” என்று இரக்கப்பட்டார். அவைகள் பசியில் பரிதவிப்பதைப் பார்த்து எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்னும் தீர்மானத்துடன் மருமகள் இருந்தாள்; தன் மக்களையும் கணவனையும் அனுப்பி நாயைத் தேடச்செய்தாள்; ஏழைக் கணவர், “தாய்க்கில்லாத அன்பா, எங்கிருந்தாலும் அது வந்திருக்கும்; முனிசிபாலிட்டியார் பிடித்துக்கொண்டு போய் இருப்பார்கள்; காலையில் பணம் கட்டி மீட்கலாம்” என்று இரக்க மனதுடன் கூறினார்.
செல்வர் மனைவி சொன்னதைக் கேட்டு மேல்வீட்டு தலைவி, நாய் குட்டிகளை வெளியில் போடச்சொன்னதும், நாய்க் குட்டிகளின் பசி போக்க பால் வாங்கக்கூட பணமில்லாது வறுமையில் வாடும் இக் குடும்பத்தின் தாய், குட்டிகளை வெளியில் போட மனமில்லாமல் குட்டிகளின் பசிபோக்க துணிந்தாள். தனது பாலை கொட்டாங்குச்சியில் பீச்சி எடுத்து பஞ்சு போன்ற சிறிய துணியால் தன் பாலை நனைத்துக் குட்டிகளின் வாயில் வைத்தாள்; அவை சுவைத்து அமைதியடைவதைக் கண்டு அவள் முகம் மலர்ச்சியுற்றது.
தன் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய பாலை நாய்க்குட்டிகளுக்குப் பகிர்ந்தளித்துக் காத்த கருணை உள்ளம் கொண்டவர் ஏழைத்தாய் என்பது இக்கதையின் மூலம் வெளிப்படுகிறது.
நெடுவினாக்கள்
அடித்தளம்