ஏழைத் தாயின் பாத்திரப் படைப்பை விளக்கி எழுதுக.
நெடுவினாக்கள்
குறட்டை ஒலி
Answers
விடை:
ஏழைத்தாயின் பாத்திரப்படைப்பு ஓர் பார்வை:
மூன்று குடும்பங்கள்:
ஒரு குடியிருப்பில் மூன்று குடும்பங்கள் வாழ்ந்தன. கீழே வடக்கிலும் தெற்கிலும் இரு குடும்பங்கள்; மாடியில் ஒரு குடும்பமும் இருந்தது. அதிக குடும்ப உறுப்பினர்கள் உள்ள தென்பகுதிக் குடும்பம் வறுமையில் வாடியது; இவர்களோடு ஒரு நாயும் இருந்தது. வடபகுதிக் குடும்பம் பொருட் செல்வமுடையது; மக்கட் செல்வம் இல்லாதது; கணவன் மனைவி இருவரே அக்குடும்ப உறுப்பினராவர். மாடியில் இருந்த குடும்பம் கீழே உள்ள இரு குடும்பங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது வேடிக்கை பார்க்கும்.
தாய்நாயின் பிரிவும் மானிடப் பண்பும் :
தென்பகுதி வீட்டு எஜமானிக்கும் ஏழாவது குழந்தையும், அவர் வளர்த்த நாய்க்கு ஐந்து குட்டிகளும் ஒரே சமயத்தில் பிறந்தது. மூன்றாம் நாள் வீட்டை விட்டு வெளியே சென்ற தாய்நாய், வீடு திரும்பவில்லை. ஐந்து குட்டிகளும் பாலுக்கு ஏங்கின; ‘கய்ங் கய்ங்’ என்று ஒலியெழுப்பின. ஏழை மனைவி நாய்க்குட்டிகளின் ஒலியைத் தாங்காமல் தம் இரு மகன்களை அனுப்பி நாயைத் தேடச் சொன்னாள். அவர்கள், நாயைக் காணாமல் திரும்பினர். இரக்க சுபாவமுள்ள ஏழை மனைவி, வேலை முடித்து வீடு திரும்பிய தன் கணவனையும நாயைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு அனுப்பி வைத்தாள். வடக்குப்பகுதியில் உள்ளவர், மாடியில் குடியிருப்பவரிடம் நாய்க் குட்டிகளின் ஒலியைத் தாங்க முடியாமல் முறையிட்டார். லைசென்ஸ் பணம் கட்ட முடியாதவர்கள் நாய் ஏன் வளர்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு, "அக்குட்டிகளைக் கொண்டுபோய்த் தொலைவில் விட்டு விட்டால் எவரேனும் எடுத்துக்கொண்டு போவார்கள்,” என்று வழிமுறைகளைக் கூறினார். மாடி வீட்டு அம்மையார் தென்பகுதி வீட்டாரிடம், வடபகுதி வீட்டார் கூறியவற்றைத் தெரிவித்தார்.
“மூன்று நாள் குட்டிகளை வெளியில் விட்டால் செத்துவிடும். அவற்றை வளர்ப்பது கடினம். இராப்பொழுது கழிந்ததும், காலையில் முனிசிபாலிட்டியில் பணம் கட்டி நாயை மீட்டுக் கொண்டுவந்து காப்பாற்றலாம்” என்று அந்த ஏழை மனைவி இரக்க மனதுடன் மறுமொழி கூறினாள்; தான் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டி உறங்கவைத்த பின், குட்டிகளுக்கு அருகில் உட்கார்ந்தாள்; கொட்டாங்குச்சியில் சிறிது பாலை ஏந்திக்கொண்டு, பஞ்சு போன்ற துணியை அதில் தோய்த்துத் தோய்த்து, ஒவ்வொரு குட்டியின் வாயில் வைத்தாள். குட்டிகள் அதைச் சுவைத்துக் குடித்து அமைதியாயின. குட்டிகள் அமைதியானதை கண்டு, அவள் மகிழ்ச்சியுடன் எழுந்து நடந்தாள் அந்த ஏழைத் தாய், ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடத்திலும் இரக்கம் கொண்டாள்; தன் பாலையே அக்குட்டிகளுக்குக் கொடுத்து அவற்றைத் தூங்கவைத்தாள்! கருணைக் கடலான ஏழைத்தாய், நாய்தானே என்று நினையாமல் அப்பச்சிளம் நாய் குட்டிகளை தம் சொந்த குழந்தைபோல் நினைத்து, அக்குட்டிகளுக்கு பாலூட்டினாள்.
பணத்தில் வறியவராக இருந்தாலும் கருணையில் வலியவராக இந்த ஏழைத் தாயின் பாத்திரப் படைப்பு உயர்ந்து விளங்குகிறது.