தொன்மைக்கால நிகழ்வுகளைக் கண்டறிவதற்குத் தடயங்கள் எவ்வாறு உதவுகின்றன?
நெடுவினாக்கள்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்
Answers
விடை:
தொல்லியலின் முதன்மையான நோக்கம்:
தொன்மைக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவைற்றை அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களான கல்வெட்டுகள், கட்டடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியவற்றின் அடிப்படையில் ஆய்ந்தறிந்துகொள்ளுதலே தொல்லியலின் முதன்மையான நோக்கம்.
அவ்வப்போது திட்டமிட்டுச் செய்யப்படும் ஆய்வுகளின்போதோ, தற்செயலாய்க் கிடைக்கும் தடயங்கள், எச்சங்கள் ஆகியவற்றின் உதவியுடனோ தொன்மைக் கால நிகழ்வுகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.
வழிகாட்டும் தடயங்கள் :
மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் என்கிற துறைமுக நகரம் சோழர்களின் கடற்கரை நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாமல் இருந்தன. இந்தியத் தொல்லியல் துறையினர் 1963ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் உள்ள கீழார்வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை, அரைவட்டவடிவ நீர்த்தேக்கம், புத்தவிஹாரம் (புத்த பிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தாலான புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன. இவை பண்டைய காவிரிப்பூம்பட்டின மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என்பதையும், காவிரிப்பூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்தது என்பதையும் வலுவான சான்றுகளாயிருந்து மெய்ப்பிக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் என்ற ஒரு நகரம் இருந்தது என்பதற்கு அங்கே கிடைத்த தடயங்கள்தாம் காரணமாய் இருந்தன.
தடயங்கள் காட்டும் உண்மைகள் :
அங்குக் கிடைத்துள்ள புத்தர் சிலை, தூண் போன்றவற்றைக்கொண்டு, அங்கு வாழ்ந்த மக்களுள் சிலர் புத்த சமயத்தைப் பின்பற்றியுள்ளனர் எனத் தோன்றுகிறது. படகுத்துறை கட்டப்பட்டுள்ளதை நோக்கும்போது, அவ்வூர் நாணயங்கள், ஓலைச் சுவடிகள், நடுகற்கள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலமும், நம் முன்னோர்களது காலத்தைப்பற்றியும் அவர்களின் சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றியும் தொல்லியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவுகளின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள இயலும்.
இவ்வாறு தொன்மைக்கால நிகழ்வுகளைக் கண்டறிவதற்குத் தடயங்கள் பெரிது உதவுகின்றது.