காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகள் :
அஹிம்சா வழி போராட்டம் :
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாயும் தூய்மையானதாயும் இருந்தால் மட்டும் போதாது, அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாய், பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருக்கவேண்டும் என்றார், காந்தியடிகள். அதனால்தான், அவர் அஹிம்சை வழி போராட்டத்தை தேர்ந்தெடுத்தார்.
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதனைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச் செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார். வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது என்று கூறினார். நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று அவர் எடுத்துக் கூறினார்.
சிக்கன வாழ்வும் எளிமையும் :
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி. ஒருமுறை அவரது துணைவியார் கஸ்தூரிபாய்காந்தி, ஆசிரமத்திற்குக் காய்கறிகள் வாங்கினார். அப்போது வழக்கத்திற்கு மாறாய் ஓர் அணா அதிகம் செலவு செய்தார். அதற்காகக் காந்தியடிகள் அவரைக் கடிந்துகொண்டார். ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.
கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்; தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்றவிடாமல் தாமே அகற்றினார். எழுதித் தேய்ந்த ஒரு பென்சிலாய் இருந்தாலும், அதை இழக்க மனம் வராமல் தேடுவார்; சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதத்திற்கு மறுமொழி எழுதுவார்.
எளிமை ஓர் அறம் :
காந்தியடிகள் விரும்பியிருந்தால் அரச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், எளிமையை ஓர் அறமாய்ப் போற்றிய அவர் மனம், அதற்கு இடம் தரவில்லை; பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார். "இந்நாட்டில் கோடானுகோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கின்றனர்.
அந்நிலையில் மன்னர்களும் செல்வர்களும் விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்து கொண்டு பகட்டாய் வாழ்கின்றனர். இது பாவமாகும். ஏழை மக்களின் காவலர்களாய் இருக்க வேண்டிய அவர்கள் இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயல்," என்றார், தேசபக்தன்.
மனித நேயம் :
"என்னைப் பொறுத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாய் இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாய் இருப்பதுந்தான்” என்று அவர் கூறுகிறார். அவர் இராமனைப் போற்றியது, அவர் மனிதனாய்ப் பிறந்து, மனிதப்பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களாய் ஏற்று, உலகம் உய்ய வழி காட்டியதுதான்.
இன்னா செய்தார்க்கும் நன்னயம் :
காந்தியடிகள், இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களைத் தென் ஆப்பிரிக்காவில் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச் செருப்பே சிறப்பாய் அமைந்தது. சிறையிலிருந்து விடுதலையானதும் தம்மைச் சிறையில் அடைத்த ஆளுனர் ஸ்மட்ஸை சந்தித்துத் தாம் தைத்த காலணிகளை வழங்கினார்.
எந்தத் தொழிலும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தவே செருப்புத் தைத்தார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் என்று அகிம்சை நெறியின் அடிப்படையில் தம்மைச் சிறையில் அடைக்கச் செய்த ஆளுநருக்கு அதை பரிசாக அளித்தார்.