அறவழி விடுதலைப்போர் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
காந்தியடிகளின் அறவழி விடுதலைப்போர் குறித்த செய்திகள்:
பொதுவாக போராட்ட முறைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
1. போர்முறையில் உரிமையை நிலை நாட்டுவது;
2. அற வழியில் உரிமைப்போர் செய்து வெற்றி பெறுவது.
இவற்றுள் அறவழியில் உரிமைப்போர் செய்யும் முறையினைக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். “மனிதனின் நோக்கம் உயர்ந்ததாயும் தூய்மையானதாயும் இருந்தால் மட்டும் போதாது. அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாய்ப் பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருத்தல் வேண்டும்" என்றார், அவர்.
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதைவிட அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச்செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார். நேதாஜி போன்றோர் போர் முறையைக் கையாண்டுதான் விடுதலை பெறமுடியும் என்றனர். அப்போது காந்தி, "வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது; நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும்; வன்முறையை அன்பு அருள் ஆகிய அறவழிகளில் தான் தடுக்க முடியும்; அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும்" என்று அவர் எடுத்துக் கூறினார்.
உலகுக்கு வழிகாட்டி :
வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையைவிட அறவழிப் போரில் இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதை ஏற்று நடத்தி, ஏனைய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாய்த் திகழவேண்டும் என்றும் விரும்பினார். இந்த வழியை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது இந்தியரின் கடமை என்றார், அவர்.
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றார்.
காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது; கதர் இயக்கம், மதுவிலக்கு தீண்டாமை ஒழிப்பு ஆகிய இயக்கங்கள் பரவின. அவர், வாழ்வு முழுவதும் உப்புக்காக, உரிமைக்காக, ஒற்றுமைக்காக, சமத்துவத்திற்காக, வன்முறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக போராடினார்.