1. செம்மொழிக்குரிய எவையேனும் ஐந்து தகுதிப்பாடுகளை விளக்கி எழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 18 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்:
1. தொன்மை :
முதல் மாந்தன் தோன்றிய இடம், குமரிக்கண்டம். அம்முதல் மாந்தன் பேசிய மொழி, தமிழ். அக்கண்டத்தில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள் இருந்தன.
2. தனித்தன்மை :
தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர், வாழ்வியலுக்கு அகம் புறம் என்று இலக்கணம் வகுத்தனர். திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது. எம்மொழியும் பெற்றிராத பழைமையையும் பெருமையினையும் தமிழ் பெற்றிருக்கிறது. இஃது இறவா இலக்கண இலக்கிய வளம் கொண்டு தனக்கெனத் தனி நோக்கும் போக்கும் கொண்டுள்ளது.
3. பொதுமைப்பண்பு:
தமிழர், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தனர். ஒன்றே குலம் என்று போற்றினர்; தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால் என்று உணர்ந்தனர்; செம்புலப்பெயல்நீர் போல அன்புள்ளம் கொண்டனர். இவ்வாறான பொதுமை அறங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவை உலகத்தால் போற்றப்படுகின்றன.
4. உயர் சிந்தனை :
சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்தவை; இயற்கையோடு இயைந்தவை; உலகத்தார் ஏற்கும் பொதுக்கருத்துகள் உடையவை; மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துகளை மொழிபவை.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர் சிந்தனை மிக்கது புறநானூறு. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
5. தாய்மை :
கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாய்த் திகழ்கிறது. அது பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாய் விளங்குகிறது என்பார், கால்டுவெல். ஆயிரத்தெண்ணூறு மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும், நூற்றெண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்துள்ளது, தமிழ். எனவே, மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் தமிழ் திகழ்கிறது.