1. தேரா மன்னா என விழித்துக் கண்ணகி கூறியன யாவை?
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை :
தேரா மன்னா என விழித்துக் கண்ணகி கூறியது:
சோழநாட்டின் பெருமை :
கண்ணகி பாண்டியனை நோக்கி, "ஆராய்ச்சித் திறம் அற்ற அரசனே! இகழ்ச்சியற்ற சிறப்பினையுடைய தேவர்களே வியக்குமாறு தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்கு ஈடாய்த் தன் உடல் தசைகளை அரிந்து துலாத்தட்டில் வைத்து, அப்பறவையின் துயரத்தை நீக்கியவன், சிபிச்சக்கரவர்த்தி.
தன் அரண்மனை வாயிலில் கட்டிய ஆராய்ச்சி மணியின் எழுப்பிய ஒலியைக் கேட்டு, தாய்ப்பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்ச சக்கரத்திலிட்டு, அந்த வாயில்லா ஜீவனுக்கு நீதி வழங்கினான் மனுவேந்தன்.”
குடியின் பெருமை :
"இத்தகையோர் ஆண்ட மிக்க புகழ் வாய்ந்த காவிரிப்பூம்பட்டினமே நான் பிறந்த ஊராகும். அவ்வூரில் குற்றமற்ற சிறப்பினை உடைய பெருங்குடி வாணிகர் மரபில் தோன்றிய மாசாத்துவான் என்னும் வணிகன் மகன், கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகி”
ஆய்ந்து பாராத மன்னன்:
"கோவலன் தான் இழந்த பொருளை மீண்டும் பெற்று நல்வாழ்வு வாழ விரும்பி நின் நகரை அடைந்தான்; என் காற்சிலம்பை விற்க விரும்பினான்; அக்காற்சிலம்பு யாருடையது என்று ஆராய்ந்து பார்க்காமல், உன்னால் கள்வன் என்று கொல்லப்பட்டான். அவன் மனைவி நான், கண்ணகி என்பது என் பெயர்" என்றாள்.