2. கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி குறித்து விவரிக்க.
நெடுவினாக்கள் / Long answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
கலை அறிவியல் கல்வி:
மேனிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ், ஆங்கிலம் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப்பதிவியல், கணிப்பொறியியல் முதலிய பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப்பட்டமும் அதன் பின்னர் முதுகலைப்பட்டமும் பெறலாம். பட்டம் பெறுவோர், கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து, இளம் கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியர் பணியைப் பெறலாம்.
கலை அறிவியல் கல்வி பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் :
கலை அறிவியல் கல்வி பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், நடுவணரசுத் தேர்வாணையம், வங்கித்துறை, ஆயுள் காப்பீட்டுத்துறை, தொடர் வண்டித்துறை முதலிய துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுப் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெறலாம். இதற்கான தகவல்களை நாளேடு, வானொலி, தொலைக்காட்சி முதலிய ஊடகங்களின் மூலம் பெற்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
சிறுதொழில் கல்வி :
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, ஒராண்டு அல்லது ஈராண்டுப் பயிற்சி பெற்றுப் பணியில் சேரலாம். இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கம்மியர், கடைசல் பிடித்தல், கட்டட வரைபடம் வரைதல், நில அளவை, தச்சு ஆகிய படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி, குளிரூட்டும் கருவி, செல்பேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்த்தல் ஆகிய படிப்புகளும் உள்ளன. இப்படிப்புகளில் அவரவர் விருப்பத்திற்கேற்பச் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
சிறுதொழில் கற்றவர்கள் அரசுப்பணிக்காகக் காத்திராமல் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். அப்பொழுது தான் வேலையில்லா நிலை மாறும். சுயதொழில் தொடங்குவதற்கு வேண்டிய வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், கடனுதவி ஆகியவற்றை அரசு அளிக்கிறது. அவற்றைப் பெற்றுச் செயல்படுவதற்கான மனத்துணிவும் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். அத்தகையோர் வேலைக்காகக் காத்திருக்கவோ ஏங்கவோ தேவையில்லை. மேலும் அவர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பும் அளிக்கலாம்.