தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதனை விளக்குக.
நெடுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
Answers
விடை:
பண்டைத்தமிழர் அறிவியலின் பல்வேறுபட்ட துறைகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர் என்பதையும் இவ்வண்டப் பரப்பையும் அதன் மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாய்ப் பேசுகின்றன.
விண்ணியல் அறிவு:
‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்ற திருவாசகத்தின் வரிகள் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை ஆழமாக உணர்த்துகிறது. உலகம் என்னும் சொல் உலவு என்னும் சொல்லின் அடியாய்ப் பிறந்தது என்றும் அது சுற்றுதல் என்னும் பொருளைத் தரும் எனலாம். உலகம் தன்னையும் ஞாயிற்றையும் சுற்றி வருகிறது என்னும் அறிவியல் கருத்து இதில் வெளிப்படுவதைக் காணலாம்.
ஞாலம் என்னும் தமிழ்ச்சொல் ஞால் என்னும் சொல்லடியாய்த் தோன்றியது என்பர். ஞால் என்பதற்கு தொங்குதல் என்பது பொருள். எவ்விதப் பற்றுக்கோடுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதனை இஃது உணர்த்துகிறது வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. இதனையும் பண்டைத் தமிழர் அறிந்தனர் என்பதை "வறிதுநிலைஇய காயமும்” (புறம். 30) என்னும் பாடல் அடி உணர்த்தும்.
"வலவன் ஏவா வானூர்தி" (புறம், 27) என்னும் தொடர், வலவனால் ஏவப்படாத வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தி இருக்கலாம் என உணர்த்துகிறது. இது செயற்கைக்கோளைப் போன்றது என்று கருத இடமுண்டு.
மண்ணியல் அறிவு:
நிறத்தின் அடிப்படையில் செம்மண் என்றும் சுவையின் அடிப்படையில் உவர்நிலம் என்றும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் என்றும் வகைப்படுத்தினர். ‘செம்புலப் பெயல் நீர்போல’ எனக் குறுந்தொகையும் ‘உறுமிடத்து உதவா உவர்நிலம்’ எனப் புறநானூறும், ‘பயவர்க் களரனையர் கலலாதவர்’ எனத் திருக்குறளும் கூறியுள்ளன.
பொறியியல் அறிவு:
‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’ என்று பதிற்றுப்பத்துக் கூறும் தொடர்மூலம், அன்றே கரும்பு பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என அறிகிறோம். ‘அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்’ பெருங்கதையின் வரியின் வாயிலாக, நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக்கிணறு அக்காலத்தில் இருந்திருக்கலாம் என அறியலாம்.
கனிமவியல் அறிவு:
சிலப்பதிகாரத்தில் ‘ஐவகை மணிகள் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்கள் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே.’ எனக் கூறப்பட்டுள்ளது. இஃது இன்றைய வேதியியல் கூறுகளுடன் ஒப்புநோக்கத்தக்கது.
அணுவியல் அறிவு :
அணுச் சேர்ப்பும் அனுப்பிரிப்பும்பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளதை அறியலாம். நீரியல் : நீர், மழையாய் மண்ணிற்கு வருவதும், ஆவியாகி விண்ணிற்குச் செல்வதுமான சுழற்சி எக்காலமும் தொடராக நடைபெறுவது. இவ்வியக்கம் இல்லையெனில் மழை வளம் குன்றும்; வெப்பநிலை மிகும்; தட்பவெப்ப நிலை மாறும்; கடல் வற்றும். இதனை, நெடுங்கடலும் "தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் " என்னும் குறள்மூலம் வள்ளுவர் கூறுவன அறிவியல் சார்ந்த கூர்த்த சிந்தனைகளாகும்.
இவ்வாறு பல்வேறுபட்ட தளங்களில் தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.