1. அம்பேத்கரின் அரும்பணிகள் குறித்துத் தொகுத்து எழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
சாதி என்னும் களை :
அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்து மக்களிடையேயும் பாராளுமன்றத்திலும் முழங்கியவர். மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் ஒடுக்கப்பட்டோர் நீரெடுக்கக் கூடாது என உயர்சாதியினர் தடுத்தனர். அதை எதிர்த்து 1927ஆம் ஆண்டு அம்பேத்கர் தண்ணீர் எடுக்கும் போட்டம் நடத்தினார். சாதி களையப்பட வேண்டிய களை என்று அவர் கருதினார்.
விடுதலை உணர்வு :
"இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்த நிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும்," என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாய்க் கூறினார்; "முழுமையான விடுதலையைக் கண்டிப்பாய் வழங்கவேண்டும்; அதற்கு முன்னர்த் தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும்" எனவும் அம்பேத்கர் முன்மொழிந்தார்.
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் :
வட்டமேசை மாநாடு 1930ஆம் ஆண்டு நடைபெற்றது. அம்மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் கலந்துகொண்டார். அங்கு, "அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாய் நான் பேசுகிறேன்" என்று தம் பேச்சைத் தொடங்கினார். "மாற்றார் ஆதிக்கம் நீக்கப்பட்டு மக்களால் ஆளப்படும் மக்களாட்சி அமைவதையே நாங்கள் விரும்புகிறோம்; வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய எங்கள் குறைகள் நீங்கா" என மொழிந்தார். ஒடுக்கப்பட்டோரின் இவ்வுரிமைக் குரல் வட்டமேசை மாநாட்டின் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது.
காலத்திற்கேற்ற கல்வி :
அவர் 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார். மும்பையில், இவரின் அரிய முயற்சியால் உருவானது, சித்தார்த்தா உயர் கல்வி நிலையம். இங்கு இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
பொருளாதார வல்லுநர் :
அம்பேத்கர் எழுதிய இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூல் பொருளாதாரத்தில் சிறந்த நூலாய்க் கருதி அதைப் பொருளியல் வல்லுநர்களும் பேராசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள். பொருளியலில் பெரும்புலமை பெற்று விளங்கியதால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை அணுகியும் நுணுகியும் ஆராய்ந்து பார்க்க இவரால் இயன்றது; தொழில்துறையில் பொருளாதார வளர்ச்சி அடைவதற்குப் புதிய புதிய கருத்துகளை வெளிப்படுத்தினார்.
சாதிப்புழுக்களுக்கு நச்சு மருந்து :
சமுதாயம் என்னும் மரத்தின் வேர்களைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து, இவர்; புறக்கணிக்கப் பட்ட மக்களுக்காகத் தம்மை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்டார்.
இந்நிய குடியரசில் மகத்தான பணி :
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவிலுள்ள பலரும் செயல்படாமல் விலகினர். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்ட அடிப்படையில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா முழுமையான குடியரசு நாடாய் அறிவிக்கப்பட்டது.